இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் குழுக்களும் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இன்று (26) கலந்துரையாடல்கள் சில இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இது தொடர்பில் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் மற்றும் சின்னம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, கூட்டணி அமையுமாயின் அதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்கும் இடையில் இன்று மாலை 4.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.
0 Comments