வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு அருகில் இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கள் போதுமானதாக இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

கடந்த காலங்களில் அவர்கள் எதிர்கொண்ட பல்வேறு சிரமங்கள் குறித்து இதற்கு முன்னரும் வௌியிட்டிருந்தோம்.

எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளதாக அவர்கள் பின்னர் தெரிவித்தனர்.

இவ்வாறான பின்னணியில் நிலைமையை தணிக்கும் நோக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

அதன்படி, வருகைத் தரும் வரிசைக்கு அமைய கடவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் இன்றும் பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வளாகத்தில் நீண்ட வரிசையினை காண முடிந்தது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முறையான நடைமுறைகளை பின்பற்றாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.