அமைச்சர் அலிஸாஹிர் மெளலானாவின் முயற்சி வெற்றி.!


அமைச்சர் அலிஸாஹிர் மெளலானா விடுத்த வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக

பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்த காத்தான்குடி ஜாமிஉல் அதர்

பள்ளிவாசல் விடுவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் திறக்கப்பட்டு இன்று (06) வெள்ளிக்கிழமை காலை சுபஹ் தொழுகை இடம்பெற்றது.



தொழுகையை காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பொதுச் செயலாளரும் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் (அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயல்) இமாமுமான அஷ்ஷெய்க் இல்ஹாம் பலாஹி நடாத்தினார். இதில் அமைச்சர் அலிஸாஹிர் மெளலானாவும் கலந்து கொண்டிருந்தார்.


இப்பள்ளிவாசல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டிருந்தது. 


அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பதவிக் காலத்துக்கு முன்னதாக கோட்டாபயவின் ஆட்சியின்போது இந்தப் பள்ளிவாயலை கிழக்கு மாகாண பொலிஸ் புலனாய்வுத் தலைமையகமாக மாற்றியமைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.


எனினும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் குறித்த முயற்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து மூடப்பட்டு- பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்த பல்வேறு பள்ளிவாசல்கள், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் படிப்படியாக முஸ்லிம்களிடம் மீளக் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.