ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லாவில் உள்ள அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட இஸ்ரேலியப் படை, அதனை ஆரம்பக் கட்டமாக 45 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.
முகமூடி அணிந்து, ஆயுதம் ஏந்திய இஸ்ரேலியப் படையினர் நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது நேற்று (22) காலை அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தனர். இதன்போது இந்த செய்தி ஒளிபரப்பின் மேற்குக் கரை பிரிவுக்கான தலைவர் வலீத் அல் ஒமரியிடம் இந்தச் செய்தி ஒளிபரப்பை மூடும் உத்தரவை படையினர் கொடுக்கும் காட்சி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நேரடியாகக் கண்டனர்.
ஏற்கனவே நசாரத் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள அல் ஜசீரா அலுவலகங்கள் மீது இஸ்ரேலியப் படை சுற்றிவளைப்பை நடத்தியது. கட்டாரைத் தளமாகக் கொண்ட இந்தச் செய்தி ஒளிபரப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று இஸ்ரேல் அப்போது தெரிவித்தது. ‘உண்மையை மறைப்பது மற்றும் மக்கள் உண்மையை கேட்பதைத் தடுக்கும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் எப்போதுமே இலக்கு வைக்கப்பட்டு வருகின்றனர்’ என்று ஒமரி குறிப்பிட்டார்.
அல் ஜசீரா அலுவலகத்திற்கு வெளியில் கடைசி ஒலிவாங்கி மற்றும் கெமராவை பறிமுதல் செய்த படையினர் ஒமிரியை அலுவலகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக அல் ஜசீரா செய்தியாளர் முஹமது அஸ்லாபின் குறிப்பிட்டார்.
0 Comments