வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்னும் சில மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், டிரம்ப் மீதான பாலியல் புகார்கள் மீண்டும் மிக பெரியளவில் வெடித்துள்ளன. குறிப்பாக ஜெசிகா லீட்ஸ் என்ற பெண் டிரம்ப் பெண்களை மதிப்பதே இல்லை என்பதைத் தொடர்ந்து சொல்லி வருகிறார். இது தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் நவ. மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இதற்காக இங்குத் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. "அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்! பைடனை ஓவர் நைட்டில் காலி செய்த மேட்டர்- கொஞ்சம் அசந்தாலும் ஆள் காலி " இதற்கிடையே ஜெசிகா லீட்ஸ் (82) என்ற பெண் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் புகார்களை முன்வைத்துள்ளார்.
1970களில் விமானத்தில் வைத்து டிரம்ப் தன்னிடம் அத்துமீறியதாக லீட்ஸ் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார்: டொனால்ட் டிரம்ப் மீது பெண்கள் பலரும் பாலியல் புகார்களை அளித்துள்ளனர். ஏற்கனவே ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இது தவிர மேலும் பல பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார்களை அளித்திருந்தனர். 1996ஆம் ஆண்டு டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் வைத்து டிரம்ப் தன்னை பலாத்காரம் செய்ததாக ஈ. ஜீன் கரோல், கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மேலும் பல பெண்கள் டிரம்ப் தங்களிடமும் அத்துமீறியதாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
அத்துமீறல்: அதன் ஒரு பகுதியாகவே 82 வயதான ஜெசிகா லீட்ஸ் வாக்குமூலம் அளிக்க வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லீட்ஸ், விமானத்தில் தனக்கு என்ன நேர்ந்தது என்ற தகவல்களைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய லீட்ஸ், "விமானத்தில் முதல் வகுப்பில் அவருக்கு அருகே எனது சீட் இருந்தது. விமானத்தில் போய்க் கொண்டு இருந்த போது திடீரென அவர் என்னைப் பிடித்து, முத்தமிட முயன்றார்.. என் குட்டை பாவாடைக்குள் கையை விட்டார். அவரது கைகள் ஆக்டோபஸ் போல என்னைப் பிடித்துக் கொண்டது. அப்போது அவரை நான் பலமாகப் பிடித்துத் தள்ளினேன். இது குறித்து விமானப் பணிப்பெண்களிடம் புகார் அளித்தேன். அதைத் தொடர்ந்து அவர்கள் என்னை பின் சீட்டில் மாற்றி அமர வைத்தனர். இதில் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவம் நடந்து சில காலம் பிறகு டிரம்பை சந்திக்க நேர்ந்தது. அப்போது டிரம்ப் விமான நிலையத்தில் என்னிடம் அத்துமீறியதை ஜாலியாக நினைவுகூர்ந்தார். நான் யார் என்பது ஞாபகம் இருப்பதாகக் கூறிய அவர் ஆபாசமாகவும் என்னைப் பற்றிப் பேசினார்.
வாக்குமூலம்: பெண்கள் மீது டிரம்ப்பிற்கு மரியாதை இல்லை. டிரம்பிடம் இருக்கும் அடிப்படை பிரச்சினை என்னவென்றால்.. தான் பெண்களிடம் அத்துமீறுகிறோம் என்பதையே அவர் உணர்வதில்லை. தான் செய்வது சரி என்றே அவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் அத்துமீறினார். இப்போதும் என்னைத் தாக்கியும் விமர்சித்துமே பேசி வருகிறார்.
உண்மை: டிரம்ப் மீது நான் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்துவதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், பொய்யான புகார்களைச் சொல்வதில் எனக்கு எந்தவொரு லாபமும் இல்லை என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். டிரம்ப் மீது பாலியல் புகார் அளிக்கும் முதல் நபர் நான் இல்லை. அதேபோல நிச்சயம் கடைசி நபரும் நான் இல்லை. ஏனென்றால் அவர் நினைவில் கொள்ளாத முடியாத அளவுக்குப் பலரிடம் அத்துமீறி இருக்கிறார்" என்றார்.
0 Comments