மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் மற்றுமொரு பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. பணியாளர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் அது ஹமாஸ் கட்டுப்பட்டு மையம் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் காசா போரில் ஏற்கனவே பல முறை தாக்குதலுக்கு இலக்கான நுஸைரத்தில் இருக்கும் அல் ஜவுனி பாடசாலை மீதே இஸ்ரேல் நேற்றும் குண்டு வீசியுள்ளது. ஐ.நாவினால் நடத்தப்படும் அந்தப் பாடசாலையில் ஒரு பகுதி இந்தத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
‘ஐந்தாவது தடவையாகவும் ஐ.நாவினால் நடத்தப்படும் அல் ஜவுனி பாடசாலை மீது இஸ்ரேலியப் படை குண்டு வீசியதில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் பணியாளர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசால், டெலிகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் தமது ஆறு பணியாளர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் பின்னர் தெரிவித்தது. ஒற்றைச் சம்பவம் ஒன்றில் அதிகமான பணியாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்வாக இது உள்ளது என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
‘கொல்லப்பட்டவர்களில் அந்த முகாமில் ஐ.நா. முகாமையாளர், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை வழங்கி வந்த உறுப்பினர்கள் அடங்குவர்’ என்று ஐ.நா. நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளது.
‘பாடசாலைகள் மற்றும் மற்ற சிவில் உட்பட்டமைப்புகள் எந்த நேரத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு அவை இலக்கு வைக்கப்படக் கூடாது’ என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
காசா போரினால் அங்குள்ள 2.4 மில்லியன் மக்களில் அதிகப்படியானோர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அங்குள்ள பாடசாலைகள் மக்களுக்கு அடைக்கலம் அளிக்கும் இடங்களாக மாறியுள்ளன.
இஸ்ரேலியப் படை இவ்வாறான பாடசாலைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்கு பலஸ்தீன போராளிகள் இயங்கி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் அற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடத் தவறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்து வருகிறது.
தாக்குதலில் உயிர் தப்பியவர்கள், கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்பது மற்றும் இடிபாடுகளில் புதையுண்ட தமது உடைமைகளை சேகரிப்பதில் ஈடுபட்டனர். ‘இந்த நரகத்தில் நாம் 340 நாட்களைக் கடந்திருக்கிறோம். ஹொலிவுட் திரைப்படங்களில் கூட நாம் இப்படிக் கண்டதில்லை, காசாவில் இப்போது காண்கிறோம்’ என்று உயிர் தப்பிய ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
உணர்வற்ற கொலைகள்
உலகில் மனிதாபிமான பணியாளர்களுக்கான அபாயகரமான இடமாக காசா உள்ளது என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. பாடசாலை மீதான புதிய தாக்குதலை அடுத்து காசா போரில் குறைந்தது 220 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி குறிப்பிட்டுள்ளார்.
‘நாளுக்கு நாள் முடிவில்லாத மற்றும் உணர்வற்ற கொலைகள் இடம்பெறுகின்றன’ என்று அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘போர் ஆரம்பித்தது தொடக்கம் மனிதாபிமான பணியாளர்கள், வளாகங்கள் மற்றும் செயற்பாடுகள் அப்பட்டமாக மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி புறக்கணிக்கப்படுகின்றனர்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
காசாவில் நடந்ததை ‘முற்றாக ஏற்க முடியாது’ என்று ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டரஸ் கூறினார்.
காசாவில் 342ஆவது நாளாகவும் இஸ்ரேலின் சராமாரி தாக்குதல்கள் நேற்று (12) இடம்பெற்றன. வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாம் மீது நேற்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதில் அல் பக்குரா பகுதியில் சியாம் குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் மூவர் கொல்லப்பட்டிருப்பதோடு அல் செய்தூனில் இடம்பெற்ற தாக்குதலில் மேலும் இருவர் பலியானதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
தெற்கு காசாவின் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரின் கிர்பத் அல் அதாஸ் பகுதியில் நேற்று நடந்த தாக்குதல் ஒன்றில் மூவர் கொல்லப்பட்டதாக வபா கூறியது. மத்திய காசாவின் புரைஜ் மற்றும் நுஸைரத் அகதி முகாம்களின் குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்து 34 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 96 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,118 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 95,125 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதாற்கு கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் பல மாதங்களாக இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மே மாதத்தில் முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே அண்மைக்கால பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே பெரும் பிளவு நீடித்து வருகிறது.
எனினும் புதிய நிபந்தனைகள் இன்றி முந்தைய அமெரிக்காவின் நிபந்தனையின் அடிப்படையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றில் உடன் கைச்சாத்திடுவதற்கு தயார் என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமது பேச்சுவார்த்தைக் குழுவினர் கடந்த புதனன்று கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அல்துல்ரஹ்மான் அல்தானிய மற்றும் எகிப்து உளவுப் பிரிவுத் தலைவர் அப்பாஸ் கமேலை டோஹாவில் சந்தித்து பேசியதாக ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குக் கரையில் நால்வர் பலி
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் சுற்றிவளைப்பு தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் மேலும் நான்கு பலஸ்தீனர்கள் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டுகளின் பின்னர் மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தும் பாரிய இராணுவ நடவடிக்கை தற்போது மூன்றாவது வாரத்தைத் தொட்டுள்ளது.
துல்கர்ம் நகரில் கடந்த புதன்கிழமை இரவு இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. துபாஸ் நகருக்கு அருகில் இருக்கும் பாரா அகதி முகாமில் இஸ்ரேலின் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
துல்கர்மில் இஸ்ரேல் நடத்திய ஆளில்ல விமானத் தாக்குதலில் வாகனம் ஒன்றும் அருகில் இருக்கும் வீடு ஒன்றும் தீப்பற்றியதாக வபா குறிப்பிட்டது.
இந்தக் கொலைகளுடன் கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி மேற்குக் கரையில் இஸ்ரேல் ஆரம்பித்த படை நடவடிக்கையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இதில் கடந்த புதன்கிழமை காலை துபாஸ் நகரில் இடம்பெற்ற வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐவரும் அடங்குவர்.
மேற்குக் கரையின் வடக்கே துல்கர்ம், துபாஸ் மற்றும் ஜெனின் நகரங்களிலேயே இஸ்ரேலின் படை நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருப்பதோடு வீதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.
0 Comments