எரிவாயு சிலிண்டர் வெடித்து மூதாட்டி மற்றும் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவமொன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டையில் மூதாட்டி ஒருவர் இன்று அதிகாலை குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்தார்.


நேற்று இரவு எரிவாயு சிலிண்டரை சரியாக மூடாததால் இரவு முழுவதும் எரிவாயு கசிந்து அறையில் பரவி இருந்தது.

மூதாட்டி எரிவாயு அடுப்பை பற்ற வைத்த போது எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் சிக்கிய மூதாட்டி மற்றும் அவரது 2 பேத்திகள் பரிதாபமாக உயிரிழந்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.

எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டியும் அவரது 2 பேத்திகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இறந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.