கிழக்கு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படவுள்ள விஞ்ஞான ஆய்வு மாநாட்டில் மெத்திகா விதானகே சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டுள்ளது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு சிரேஷ்ட வைத்தியரும் இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் ருவைஸ் ஹனீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எம். செல்வராஜா மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் வீ.கனகசிங்கம் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி தங்களது பல்கலைக்கழகத்தில் பிராந்திய சவால்களை சமாளிப்பதில் விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகள்’ எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு ஒன்று நடைபெறவுள்ளதாக அறிகிறோம். இதில் சிறப்பு பேச்சாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெத்திகா விதானகே அழைக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம்.
இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிக்கப்பட வேண்டும் என்ற ஆதாரமற்ற விஞ்ஞான ஆய்வினை சமர்ப்பித்ததன் மூலம் இது தொடர்பில் சர்வதேச ரீதியாக முன்வைக்கப்பட்ட வழிகாட்டல்களைப் புறந்தள்ளுவதற்கு காரணமாக அமைந்தார். தற்போது இந்த கொள்கைக்காக இலங்கை அரசாங்கம் மன்னிப்புக் கோர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன் இத் தீர்மானம் விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வாறானதொரு சங்கடமான நிலைக்கு அரசாங்கத்தைத் தள்ளுவதற்கு பிரதான காரணமாக அமைந்தவரே இந்த மெத்திகா விதானகே ஆவார். இந்த மெத்திகா விதானகே இதுவரை தனது விஞ்ஞான ஆய்வினை வெளிப்படுத்தவில்லை. அவரது ஆய்வு வெளிப்படைத்தன்மையற்றதாகும். இவரது இந்த செயற்பாடு ஆயிரக்கணக்கான இலங்கையர்களை பாரிய மன அழுத்தத்திற்குள் தள்ள வழிவகுத்துள்ளது.
இவ்வாறான பின்னணியைக் கொண்ட மெத்திகா விதானகே தங்களது பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஆய்வு மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளமை இலங்கையின் மதிப்புமிக்க கல்விச் சமூகத்தையும் ஆய்வாளர்களையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
எனவே இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் மெத்திகா விதானகேயின் தகுதிகள் குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறும் வேண்டிக் கொள்கிறோம் என்றும் அக் கடிதத்தில் வைத்தியக் கலாநிதி ருவைஸ் ஹனீபா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். – Vidivelli
0 Comments