ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் இடையே தற்போது கட்சித்தாவல்கள் இடம்பெற்று வருகின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அரசியல் செய்து பின்னர் பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் தனியார் தொலைக்காட்சியான நியூஸ்ஃபெஸ்ட் இல் ஒளிபரப்பாகிய ‘சமர்’ எனும் அரசியல் நிகழ்ச்சியின் விவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.

எம்.வேலு குமார் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போற்கு கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருந்தனர்.

இந்நிலையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கடந்த 15ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலு குமார் தெரிவித்திருந்தார்.

இவர் கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவானவர்.

இவ்வாறு இருக்க நியூஸ்ஃபெஸ்ட் சமர் நிகழ்ச்சியில் எம்.வேலு குமார் மற்றும் பழனி திகாம்பரம் ஆகிய இருவருக்கிடையில் இடம்பெற்ற கட்சித்தாவல் தொடர்பிலான கருத்து மோதல் இறுதியில் கைகலப்பாக மாறியது.

நிகழ்ச்சியின் இடையே பழனி திகாம்பரம் எம்.வேலு குமாரைப் பார்த்து ‘பாbர் குமார்’ எனக் கூறிக் கொண்டே செல்ல, எம்.வேலு குமார் திகாம்பரத்தினை பார்த்து குடு திகாம்பரம் எனக் கூற, கோபம் உச்சத்தில் ஏற திகாம்பரம் வேலு குமாரை தாக்கி கழுத்தினை நெரிக்கும் விதமாக நடந்து கொண்டிருந்ததை நேரலையூடாக காணக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் தொகுப்பாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து சமரசம் செய்தனர்.

பின்னர் வேலு குமார் தெரிவிக்கையில்; திகாம்பரம் சொல்லும் போது நாம கேட்டிட்டு இருக்கணும் நாம சொன்னா அவருக்கு கோவம் பொத்திட்டு வருதுன்னு கூறியிருந்தார்.