2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்ப்புகள் எழுந்தவண்ணமுள்ளன.
ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவினை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலும் கிழக்கிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
மேலும் கிழக்கில், ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற சுவரொட்டிகளும் கிழக்கு மாகாணத்தில் பரவலாக ஓட்டப்பட்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளான ஹக்கீம் மற்றும் ரிஷாத் அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஏமாற்று அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் சுயநல அரசியல் ஒழிய வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
0 Comments