மறைந்த கங்காராம விகாரையின் தலைவர் கலகொட ஞானிஸ்ஸர தேரரின் பூதவுடல் தகனம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு இருக்கையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் ஜனாதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திடீர் மாற்றத்தை இறுதி ஊர்வலத்தில் இருந்த அனைவரும் புரிந்து கொண்டனர். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. தகவல் அறிந்த அதிகாரிகள் ஜனாதிபதியின் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.

புலனாய்வு அமைப்புகளிடமிருந்து வந்த அவசரச் செய்தியே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. காலி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கார் ஒன்றுக்கு துப்பாக்கியை கொடுத்துள்ளார் என்பதுதான் அந்த செய்தி. தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில், பட்டப்பகலில் கொழும்பு நகரின் மத்தியில் துப்பாக்கிப் பரிமாற்றம் என்ற செய்தியுடன் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் பதற்றமடைந்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்ட பாதுகாப்புப் படையினரின் கவனம் கங்காராமவில் இடம்பெற்றுவரும் பகிரங்க நிகழ்ச்சியின் போது ஜனாதிபதிக்கு எதிராக குற்றம் இழைக்கும் திட்டம் உள்ளதா என்பது குறித்து ஒரேயடியாக குவிந்துள்ளது.

இருப்பினும், புலனாய்வு அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்ட தகவல் மூலம், அந்தந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனத்தின் பதிவு எண்களும் பெறப்பட்டன. உடனடியாகச் செயற்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், இலக்கத் தகடுகளின் ஊடாக குறித்த வாகனங்களின் உரிமையை ஆராய்ந்தனர். அங்கு வெளியான தகவல்கள் அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய பலம் வாய்ந்த நபர் ஒருவரின் பெயரிலும், கார் சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் மனைவி பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

கங்காராம விகாரையின் தலைவர் கலகொட ஞானிஸ்ஸர தேரரின் தகனக் கிரியையுடன், தொடர்புடைய அரசியல் பிரமுகரும் கலந்து கொண்டதாகவும், அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவர் விட்டுச் சென்ற துப்பாக்கியொன்றும் மோட்டார் சைக்கிளில் வந்து நெடுஞ்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கியை கொண்டு வந்ததில் தவறில்லையென்றாலும், அதனை கையளிப்பதில் பின்பற்றப்பட்ட முறைசாரா முறையினால் பாதுகாப்பு பிரிவு கதிகலங்கி நின்றதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.