நாட்டின் இருவேறு பிரதேசங்களில் கஜமுத்துக்களை வைத்திருந்த பல சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.


பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பூநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 02 கஜமுத்துக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை ஈச்சலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கொகரெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, புத்தளம் பிரதேசத்தின் களப்பு பகுதியில் 03 கஜமுத்துக்களை விற்பனை செய்ய தயாராக இருந்த மூன்று சந்தேகநபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

03 கோடி ரூபாவிற்கு இந்த கஜமுத்துக்களை விற்பனை செய்யப்படவுள்ளதாக விமானப்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

உளவாளி ஒருவரை பயன்படுத்தி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் மாவனெல்ல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும் மற்றையவர் புத்தளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கஜமுத்துக்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்க பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.