துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் ஸ்ரீபுரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமுனுபுர, பிள்ளையார் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டுபாயில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'பாதள பிரியந்த' எனப்படும் குணசிறி பிரியந்த என்ற நபரால் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், உயிரிழந்தவர் கொலை செய்ய திட்டமிட்ட நபர் அல்ல என சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20, 22, 38, 40 மற்றும் 47 வயதுடைய வெலிஓயா, பதவிய, கெபதிகொல்லேவ மற்றும் பராக்கிரமபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.