காசாவில் போர் தொடரும் நிலையில் இஸ்ரேலியப் படை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து குறைந்தது மூன்று நகரங்களில் நடத்திவரும் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களில் குறைந்தது 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் புல்டோசர்களின் உதவியோடு நேற்றுக் காலை நூற்றுக்கணக்கான தரைப்படையினர் மேற்குக் கரைக்குள்ள ஊடுருவியுள்ளனர். இதன்போது இஸ்ரேலியப் படை ஜெனின், துல்கரம் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கில் சமகாலத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலியப் படையினர் டூபாஸ் அகதி முகாமில் நால்வரை கொன்றதாக பலஸ்தீன செம்பிறை சங்கத்தின் அம்புலன்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது மேலும் பலர் காயமடைந்திருந்தபோதும் அந்தப் பகுதிக்கு அம்புலன்ஸ் வண்டிகள் நுழைவதை இஸ்ரேல் இராணுவம் தடுத்து வருவதால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஜெனினில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு அருகாமையில் உள்ள செயிர் கிராமத்தில் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அதில் சென்றுகொண்டிருந்த மூவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஜெனின் அகதி முகாம் மற்றும் துர்கரமிலுள்ள நூர் ஷம்ஸ் அகதி முகாமுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இஸ்ரேலிய துருப்புகள் ஊடுருவியதை அடுத்தே இந்தத் தாக்குதல் ஆரம்பமானது. ஜோர்தான் பள்ளத்தாக்கில் உள்ள டூபாஸ் நகருக்கு இஸ்ரேலியப் படை இராணுவ ஹெலிகொப்டர் வழியே நுழைந்துள்ளது. குறிப்பாக அங்குள்ள பாரா அகதி முகாம் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான இஸ்ரேலியப் படைகள் முகாம்களை சுற்றிவளைத்திருப்பதோடு மருத்துவமனைகளை முற்றுகையிட்டு அங்கு மருத்துவ உதவியாளர்கள் செல்வதை தடுத்ததாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.
இந்த முற்றுகை மேற்குக் கரையின் வடக்கே உள்ள குறித்த மூன்று நகரங்களிலும் இடம்பெற்றிருப்பதோடு அந்த நகரங்கள் ஏனைய பலஸ்தீன பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த பல ஆண்டுகளில் தாம் கண்ட மிகப்பெரிய படை நடவடிக்கை இதுவென்று ஜெனின் முகாமைச் சேர்ந்த ஷத்தா சபோக் என்பவர் ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். ‘அதிக அளவான இராணுவ வாகனங்கள் பாரிய அளவில் ஜெனினுக்குள் ஊடுருவியுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
‘மூன்று பிரதான மருத்துவமனைகளும் முற்றுகை இடப்பட்டிருப்பதோடு நகரை நோக்கிச் செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான ஊடுருவலை நான் நீண்ட காலமாக பார்த்ததில்லை. இது பல நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டார்.
நகரில் உள்ள பல கட்டடங்களில் இஸ்ரேலியப் படை நிலைகொண்டிருப்பதோடு கூரை மேல் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளை வைத்துள்ளனர். அவர்களுக்கு முன்னால் நகரும் அனைவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
அல் பாரா முகாமிலும் இது போன்ற நிலைமை காணப்படுவதாக அங்கிருப்போர் விபரித்துள்ளனர். ‘முகாமில் பேரழிவு நிலைமை காணப்படுவதோடு இதுவரை காணாத பாரிய அளவிலான ஊடுருவல் ஒன்று இடம்பெற்றுள்ளது’ என்று அங்கிருக்கும் காலித் சோப் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
துல்கர்மில் நூர் ஷம்ஸ் முகாமில், இஸ்ரேலியப் படை அங்குள்ள மக்களை பயமுறுத்த ஆரம்பித்ததாகவும் நள்ளிரவில் அங்கு நுழைந்த விரைவில் அங்குள்ள இரு பிரதான மருத்துவமனைகளை முற்றுகையிட்டதாகவும் சம்பவத்தை பார்த்த பயான் மன்சூர் என்பவர் உள்ளூர் ஊடகத்திற்கு விபரித்துள்ளார்.
‘சுற்றிவளைப்பு மற்றும் படையினர் மற்றும் வாகனங்களின் நடமாட்டங்களை பார்க்கும்போது நீண்ட காலம் ஒன்றுக்கு நிலைகொண்டிருக்க அவர்கள் தயாராகி வருகிறார்கள் என்பது போல் தெரிகிறது’ என்று அவர் கூறினார்.
பெரும் எண்ணிக்கையான புல்டோசர்களும் அந்த மூன்று நகரில் இருப்பதாகவும் அவை வீதிகள் மற்றும் முக்கிய மின்சார மற்றும் நீர் விநியோகங்களை தகர்த்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நூர் ஷம்ஸ் மற்றும் ஜெனின் அகதி முகாம்களில் இஸ்ரேலியப் படையுடன் சண்டையிட்டு வருவதாக பலஸ்தீன போராளிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனின் மற்றும் துல்கரமில் பாரிய ‘பயங்கரவாத எதிர்ப்பு’ நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியபோதும் அது பற்றி விரிவாக எதனையும் கூறவில்லை. இந்தத் தாக்குதல் பல நாட்களுக்கும் நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய இராணுவ வட்டாரத்தை மேற்கோள்காட்டி ‘டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் தரைப்படை மற்றும் விமானப்படை உட்பட நான்கு படைப் பிரிவுகள் இணைந்திருப்பதாக இஸ்ரேலின் ‘சென்னல் 12’ தொலைக்காட்சி கூறியது.
இதேவேளை ‘இரண்டாவது இந்திபாழா போராட்டம் உச்சம் பெற்றிருந்த 2002 இல் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலுக்குப் பின் மேற்குக் கரையில் இடம்பெறும் மிகப்பெரிய படை நடவடிக்கையாக இது உள்ளது என்று இஸ்ரேல் ஊடகங்கள் விபரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தும் சுற்றி வளைப்புகள் மும்மடங்கிற்கு மேல் அதிகரித்து காணப்படுகிறது. அண்மைய வாரங்களில் அங்கு வான் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் மேற்குக் கரையில் இருந்து பலஸ்தீனர்களை இராணுவம் வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ், எக்ஸ் சமூகதளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
‘பலஸ்தீன குடியிருப்பாளர்களை தற்காலிகமாக வெளியேற்றுவது மற்றும் மற்ற தேவையான நடவடிக்கைகள் உட்பட காசாவில் நாம் செய்வது போன்று மேற்குக் கரையிலும் நாம் அச்சுறுத்தல்களை கையாள வேண்டும். இது அனைத்து இடங்களுக்குமான போர் என்பதோடு அதில் நாம் வெற்றி பெறுவோம்’ என்று அவர் நேற்று பதிவிட்டிருந்தார்.
மறுபுறம் சர்வதேசம் அமைதி காப்பதன் காரணமாகவே இஸ்ரேல் தனது கொடிய போரை மேற்குக் கரைக்கு விரிவுபடுத்தி இருப்பதாக காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இடம்பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் சுற்றிவளைப்புகள் மற்றும் இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்களில் 148 சிறுவர்கள் உட்பட குறைந்தது 646 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் கொல்லப்பட்டு மேலும் 131 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவில் ஒர் ஆண்டை நெருங்கும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,534 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 93,778 பேர் காயமடைந்துள்ளனர்.
கெய்ரோவில் இடம்பெற்று வரும் புதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் அதிகாரிகள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தப் பேச்சுவார்த்தை உடன்பாடு ஒன்றை எட்டத் தவறி வருகிறது. காசாவில் உள்ள பல பகுதிகளில் பாதுகாப்பை கட்டுப்படுத்துவதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துவரும் அதேநேரம் காசாவில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தி வருகிறது.
0 Comments