சீரற்ற காலநிலை நிலை காரணமாக புத்தளம் - மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மாராவில - பிலாகமுல்ல பிரதேசத்தில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் , நாத்தாண்டிய - உடுவல வீதியின் முட்டிபெதிவில பகுதியைச் சேர்ந்த யடவரகே தொன் ஹன்சி இஷாரா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குறித்த பெண் திருமணமானவர் - ஒரு குழந்தையின் தாயாவார்.
இதேவேளை, மாதம்பை குளியாபிட்டிய வீதியின் சுதுவெல்ல பிரதேசத்தில் மரமொன்று வீழ்ந்ததில் வீதியில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
தும்லசூரிய - உடலவெல பகுதியைச் சேர்ந்த நிசன்சலா சரோஜனி (வயது 38) என்பவரே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மாரவில மற்றும் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை,
ஹட்டன் -பொகவந்தலாவை பிரதான வீதியில் வனராஜா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்த விபத்தில் அதன் சாரதி பலத்த காயமடைந்துள்ளார்.
இன்று (22) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மத்திய மலை நாட்டில் வீசிய பலத்த காற்று காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்
0 Comments