Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற தென்னாப்பிரிக்கா


ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை தென்னாப்பிரிக்கா நாடியுள்ளது.

பலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம், காஸாவில் உள்ள பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

போர் காரணமாக காஸாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.

மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்’ (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி இருக்கையில் எகிப்துக்கும், பலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும் எல்லை பகுதியான ரஃபாவில் லட்சக்கணக்கான பலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். காஸா உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பலஸ்தீன மக்கள் ரஃபா நோக்கிதான் நகர்ந்தனர். இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தற்போது தொடங்கியுள்ளது.

இங்கு மொத்தம் 10-15 இலட்சம் பலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே வெளியேறியுள்ளனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கண்டுக்கொள்ளாமல், இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலின் இந்த ரஃபா தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென்னாப்பிரிக்கா வலியுறுத்தியுள்ளது. காஸா போர் தொடங்கிய உடனேயே இதனை எதிர்த்து தென்னாப்பிரிக்கா நீதிமன்றத்தை நாடியிருந்தது. போருக்கு தீர்வு காண வேண்டும் என்பது மட்டுமே தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையாக இருந்தது.

ஆனால் தற்போது முதன் முறையாக போர் நிறுத்தம் குறித்து தென்னாப்பிரிக்கா வலியுறுத்தியுள்ளது. “உடனடியாக போர் நிறுத்தம் குறித்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அல்லது போர் முனைக்கு சென்று உடனடியாக இஸ்ரேலின் தாக்குதுலை நிறுத்துங்கள்” என நீதிமன்றத்திடம் தென்னாப்பிரிக்கா கடுமையாக வாதிட்டுள்ளது.

Post a Comment

0 Comments