(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

தியத்தலாவை கார்பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்துக்கு போட்டிஏற்பாட்டாளர்களின் கவனயீனமே காரணமாகும். அதனால் போட்டி ஏற்பாட்டாளர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என பெயரிடப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தியத்தலாவை கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் மரணித்து 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு போட்டி ஏற்பாட்டாளர்களின் கவனயீனம் காரணமாகவே ஏற்பட்டதுள்ளது. இதுதொடர்பாக நாங்கள் தேடிப்பார்த்த போது, ஓடுபாதையில் இருந்து 50 மீட்டருக்கு அப்பால் இராணுவத்தினர் இருப்பார்கள். அதற்கு பின்னாலே பார்வையாளர்கள் இருக்கவேண்டும். அதேபோன்று தூசி இருக்குமானால் ஒவ்வொரு போட்டிக்கும் பின்னரும் தண்ணீர் தெளிக்க வேண்டும். அத்துடன் சிறிய வலைவிலும் மணல் மூடைகள் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் எதனையும் போட்டி ஏற்பட்டாளர்கள் செய்திருக்கவில்லை. அதனால் கார் பந்தய போட்டியில் ஏற்பட்ட இந்த விபத்துக்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என பெயரிடப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். என்றாலும் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது, கார் பந்தய போட்டியில் போட்டியிட்டவர்கள். இது கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து, பார்வையாளர் ஒருவரின் தலையில் விழுந்ததால் அந்த துடுப்பாட்ட வீரரை கைது செய்வதுபோலாகும்.

அதனால் இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு பொறுப்பு இருக்கிறது. அதனால் கவனயீனமாக செயற்பட்ட போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு தண்டனை வழங்கினால் எதிர்காலத்தில் இவ்வாறான தவறு ஏற்படாமல் தடுக்க முடியும். அதனால் பாராளுமன்றம் இதுதொடர்பாக கவனம் செலுத்தி போட்டி ஏற்பட்பாட்டாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க தேவையான சட்டங்களை மேற்கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.