Ticker

6/recent/ticker-posts

ஷாபியின் வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை


நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசியல் செய்ததில்லை என அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“.. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கோட்டாபயவின் சூழ்ச்சி என சும்மா வாய்க்கு வந்ததை தட்டிவிடாமல், பைத்திய கதைகளை கூறாமல் தயவு செய்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையினை முஸ்லிம், சிங்கள மக்கள் இனவாதமின்றி வாசிக்க வேண்டும்.

ஏனெனில். சஹ்ரான் போன்றதொரு, வஹாபிசம் கற்பிக்கும் கல்விக்கூடங்கள் என்ன? நிதியுதவிகள் எங்கிருந்து கிடைக்கின்றன? இன்னும் அவர்கள் செயற்பாட்டில் உள்ளனரா என்பது தொடர்பில் அறிய வேண்டும். சர்வதேச சதிகள் இருப்பது உண்மை. ஆனால், சஹ்ரான் போன்ற மனிதர்கள் தங்கள் உற்றார் உறவினர், பிள்ளைகள் மனைவி என எல்லாவற்றையும் கைவிடுகின்ற நிலை, கோடீஸ்வரர்கள் உண்ண உணவின்றி அல்ல, மனிதர்கள் கஷ்டத்திற்காக பட்டினிக்காக போராடுகிறார்கள் ஆனால் இவர்கள் அப்படியில்லையே? தேவாலயத்திற்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த மக்களை கொலை செய்ய எப்படி மனம் வரும்? என்ன காரணம்?



ஹோட்டலுக்கு சென்று, ஹோட்டலில் வெளிநாட்டவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குண்டினை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களை கொலை செய்ய எப்படி மனம் வரும்? அவற்றின் நோக்கம் என்ன? இவை பற்றி எதுவுமே தெரியாது.

வஹாபிசத்தினை ஜம்மியத்துல் உலமா ஏற்றுக் கொள்கிறது, அதற்கு எதிராக முஸ்லிம்களால் முஸ்லிம் தலைவர்களால் இன்று தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜம்மியத்துல் உலமா இன்னும் வஹாபிசத்தினை ஆதரிக்கின்றதா? அந்த கல்வி முறையை இன்னும் ஆதரிக்கின்றார்களா? இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் எங்கே இருக்கின்றது? அப்படி என்றால் தேசிய கல்வியல் முறைமை ஒன்று வேண்டும்.

ஷாபி ஷஹாப்தீன் சம்பவம் தொடர்பில் தான் அதிகமாக பேசியதாக கபீர் ஹாஷிம் தெரிவித்திருந்தார். ஷாபி ஷஹாப்தீன் சம்பவம் பொய்யானதா? வழக்கு முடிந்ததா? இல்லையே, நீதிவான் நீதிமன்றில் இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளது. எதிர்கட்சியினர் எல்லோரும் ஷாபி ஷஹாப்தீனை நிரபராதி என கதைக்கிறார்கள்.. ஷாபி ஷஹாப்தீன் நீதிமன்றினால் நிரபராதி என்றால் எனக்கு ஆட்சேபனைகள் இல்லை. வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இவ்வாறு கூறுவது என்பது இனவாதமானது.

சஹ்ரான் போன்றோர் குண்டு வெடிப்புகளை மேற்கொண்டிருக்கும் போது, ஷாபி ஷஹாப்தீன் போன்ற வைத்தியர்கள் உருவாக முடியாதா? ஷாபி ஷஹாப்தீன் தாய்மார்களுக்கு கருக்கலைப்பு செய்தார் என்றோ மலட்டு வைத்தியம் செய்தார் என்றோ எனக்கு கூற முடியாது. ஆனால் தாய்மார்கள் 900 இற்கும் மேற்பட்டோர் குருநாகல் வைத்தியசாலைக்கு வந்து ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை வழங்கினர். அவர்களில் சிலருக்கு குழந்தைகள் கிடைத்திருக்கலாம், நான் இல்லை என்று கூறவில்லை. அது என்னுடைய வேலையும் இல்லை. அதனை விசாரிப்பது எனது பொறுப்பும் அல்ல. இனவாதத்தினை தூண்டுகிறேன் என பொய்யான கதைகளை பரப்பாது, இந்த இலங்கை மண்ணில் இன்னும் இஸ்லாம் தீவிரவாதம் இருக்கின்றது. அதனை ஒழிக்க வழிதேடுங்கள்.



அப்பாவி முஸ்லிம் மக்களை துன்புறுத்த நாம் தயாரில்லை. நாம் ஒருநாளும் சொல்லவில்லை. மலட்டுக் கொத்து, மலட்டு ரொட்டி இவை ஒன்றினையும் நாம் ஒருபோதும் சொல்லவே இல்லை. நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசியல் செய்ததில்லை. முஸ்லிம் மக்களுடன் எங்களுக்கு நல்ல புரிந்துணர்வு இருக்கின்றது…”

Post a Comment

0 Comments