இன்று (23) அதிகாலை, மீகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேருகெட்டிய சந்திக்கு அருகில், வீதித் தடைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் ஆணையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தொம்பேயில் இருந்து வந்த முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு சமிக்ஞை கொடுத்த போது, பொலிஸாரின் ஆணையை மீறி முன்னே ஓட்டிச் சென்ற அவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கிச் சுட்டுவிட்டு மொரகஹஹேன நோக்கி பயணித்துள்ளனர்.
பின்னர், இது தொடர்பாக சுற்றுவட்டார பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தி கிடைத்ததும் மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தப்பிச் சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு சைகை காட்டினர்.
இந்த சந்தர்ப்பத்தில், பொலிஸ் ஆணையை மீறி முச்சக்கரவண்டி பயணித்துள்ள நிலையில், பொலிஸார் துரத்திச் சென்ற போது வீதியை விட்டு விலகி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பின்தொடர்ந்து வந்த ஜீப் வண்டி, முச்சக்கரவண்டிக்கு அருகில் வந்து நிறுத்தப்பட்ட போது முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் ஜீப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர் 36 வயதுடைய மத்தேகொட பகுதியைச் சேர்ந்த இமேஷ் தனுஷ்க தர்ஷன என்பதுடன், இலங்கைப் பொலிஸாரின் முன்னைய குற்றப் பதிவுகளை ஆய்வு செய்த போது, 2010 ஆம் ஆண்டு முதல் பல சந்தர்ப்பங்களில் வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு கஹதுடுவ மற்றும் மத்தேகொட பொலிஸ் பிரிவுகளில் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை திருடியுள்ளமையும் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த நபர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என்றும், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்றும் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
மிரிஹான, மத்தேகொட மற்றும் மொரகஹஹேன பொலிஸ் பிரிவுகளில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றைய சந்தேக நபர் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
அவர் மத்தேகொட பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வரும் சுராஜ் பிரபோத ஆதிஹெட்டி என்ற நபர் என தெரியவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் பிலியந்தலை, தலங்கம, தனமல்வில ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஐஸ் மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு நடத்த வந்த இருவரில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் இவரே எனத் தகவல் கிடைத்துள்ளது.
இவர் அது தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடந்த மார்ச் 18 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் 26.12.2002 அன்று கஹதுடுவ பொலிஸாரால் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பயன்படுத்திய கைத்துப்பாக்கி முச்சக்கரவண்டிக்கு அருகில் கிடந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments