தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொக்ஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நேற்று ஏற்பட்ட குறித்த விபத்தில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதில் 8 வயதுடைய சிறுமியொருவரும் அடங்குவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


அத்துடன், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப் பந்தயங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் சுமார் 100,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயம் 5 வருடங்களின் பின்னர் இந்த வருடம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது