3000 லட்சம் பெறுமதியான தங்கம் திருட்டு விவகாரம் : நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பெயரிடப்பட்ட சந்தேக நபரை கைது செய்யாதிருப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை
கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் தங்கப் பொருட்கள் விற்பனை செய்யும் காத்தான்குடியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது நிறுவனத்தில் சில வருடங்கள் கடமையாற்றி 2019 யில் விலகிய மொஹம்மட் சுபைர் அஹமட் சப்னி என்பவர் 3000 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை, தனது நிறுவனத்தில் கடமையாற்றிய இன்னொருவருடன் சேர்ந்து திருடியதாகக் குறிப்பிட்டு கொழும்பு குற்றப்பிரிவில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
குறிப்பிட்ட முறைப்பாட்டினடிப்படையில் கொழும்பு குற்றப்பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தலும் மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திலும் இரு வெவ்வேறு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் குறித்த சப்னி என்பவரின் வெளிநாட்டுப் பயணங்களும் நீதிமன்றத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்தவாரம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு பெருங்குற்றப்பிரிவினர் சப்னியை சமுகமளிக்குமாறு பணித்திருந்தனர்.
இந்நிலையில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களின் வழிகாட்டலில் கொழும்பு குற்றப்பிரிவினால் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் கொழும்பு குற்றப்பிரிவினரால் சப்னி கைது செய்யப்படுவதனைத் தடுக்கும் விதத்தில்; கட்டளைகளை ஆக்குவதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை வழக்கானது கடந்த 02.04.2024 ஆம் திகதி அவசர வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டு ஆதரிக்கப்படுவதற்காக கடந்த 04.04.2024ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டது.
முறைப்பாட்டாளரான சப்னியின் சார்பாக சட்டத்தரணி அமில பல்லியகே, சட்டத்தரணி ஹபீப் றிபான் மற்றும் சட்டத்தரணி ஆதம்லெப்பை ஆஸாத் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணத்தில் கொழும்பு குற்றப்பிரிவினரின் நடவடிக்கை மூலம் சப்னி கைது செய்யப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும், குறித்த திருட்டு குற்றச்சாட்டானது போலியானது என்பதுடன், எவ்வித ஆதாரங்களும் அற்ற ஓர் சந்தேகத்தினடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடாகும் என்பதனை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
சட்டத்தரணிகளினால் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்களில் திருப்தியுற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் டி.என். சமரகோன் அவர்களால் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சந்தேக நபரான சப்னியை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்வதனைத் தடுக்கும் வகையிலும் கட்டளை ஆக்கப்பட்டது.
அத்துடன் கொழும்பு குற்றப்பிரிவு பொறுபதிகாரி மற்றும் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 09.04.2024ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு தோன்றுவதற்கான அழைப்புக்கட்டளை அனுப்புமாறும் நீதிமன்ற பதிவாளருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.
0 Comments