Ticker

6/recent/ticker-posts

Video : வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் மீது தாக்குதல் : 3 ரயில்வே ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்


Colombo (News 1st) நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் சிலரால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 3 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ரயில் நிலைய அதிபர்கள் இருவர் மற்றும் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ஆகியோர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் H.M.K.பண்டார தெரிவித்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் பயணித்த 2 இங்கிலாந்து பிரஜைகளே நேற்று(05) இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கண்டி ரயில் நிலையத்தில் இருந்தே இவர்கள் ரயிலில் ஏறியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது, ரயிலின் மூன்றாம் வகுப்பிற்கான பயணச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு முதலாம் வகுப்பில் பயணித்தமையால் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் N.M.J.இதிபொல தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்னவிடம் வினவிய போது, குறித்த வெளிநாட்டவர்களை ரயிலில் இருந்து இறங்குமாறு ரயில்வே கட்டுப்பாட்டாளரால் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் இறங்க மறுத்ததால் ரயிலில் இருந்து வௌியேற்ற நேரிட்டதாக கூறினார்.

Post a Comment

0 Comments