Ticker

6/recent/ticker-posts

வட இந்திய முஸ்லிம் சமூகம் பாரிய நெருக்கடிக்குள். ஆளும் BJP அரசின் அராஜகங்கள் தொடர்கின்றன.


வட இந்திய முஸ்லிம் சமூகம் பாரிய நெருக்கடிக்குள். ஆளும் BJP அரசின் அராஜகங்கள் தொடர்கின்றன.


இந்திய மத்திய அரசை 2014ம் ஆண்டு இறுதியாகக் கைப்பற்றிய மோடி தலைமையிலான பாஜக கட்சியானது (Bharatiya Janata Party) இந்திய முஸ்லிம் சமூகத்தின் மத ரீதியான உரிமைகளைத் திட்டமிட்டு மறுத்து, கபளீகரம் செய்து வருவது அதிகரித்தவண்ணம் உள்ளது. தலைநகர் டில்லியில் சுமார் 800 வருட கால சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மேலுமொரு பள்ளிவாசலும் நேற்று முன் தினம் (30.01.2024) அதிகாலையில் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. 


பகட்டு (இந்து) மத பக்தியையும், போலி தேச பக்தியையும் வெளிப்படுத்தி வரும் குறித்த பாரதிய ஜனதா கட்சியானது (BJP) பல்வேறு 
அரசியல் அஜண்டாக்களை நோக்காகக் கொண்டே அங்கு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அநியாயங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. 


கடந்த மாதம் (2024 ஜனவரியில்) மாத்திரம் இனாவதத்திற்குப் பெயர்போன வட இந்தியப் பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்தை மத ரீதியாக நோகடிக்கின்ற மிக மோசமான மூன்று சம்பவங்களை ஆளும் BJP அரசு அரங்கேற்றியுள்ளது. 


01. 1992ல் இந்துத்துவ பேரினவாதிகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட உத்தரப் பிரதேச (UP) மானிலத்தின் அயோத்தி நகரில் அமைந்திருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாபர் மசூதி அமைவிடத்தில் நிறுவி வந்த ராமல் கோயில் திறப்பு விழாவை கடந்த 22.01.2024 அன்று பிரமாண்டமாக நடாத்தி இருந்ததும், அதன் போது அவர்கள் காண்பித்த மிதமிஞ்சிய வெற்றிக் கழிப்புக் கொண்டாட்டங்களும் முழு உலக முஸ்லிங்களின் மனதையும் புண்படுத்தி இருந்தது. 


02. அதே உத்தரப் பிரதேச மானிலத்தின் வாரணாசி நகரில் காணப்படுகின்ற மேலுமொரு சரித்திர முக்கியத்துவமிக்க பள்ளிவாசலான ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் இந்துக்கள் தமது மத சடங்குகளை ஆரம்பிக்கலாம் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஆச்சர்யமான, அபத்தமான, ஆபத்தான தீர்ப்பொன்றை சில தினங்கள் முன்பு வழங்கியுள்ளது. அதற்கிணங்க நேற்று வியாழன் (01.02.2024) இந்துத்துவ மேலாதிக்க சிந்தனை கொண்ட கூட்டமொன்று குறித்த பள்ளிவாசலுக்குள் போய் தமது பூஜைகளை ஆரம்பித்து வைத்துள்ளது. பேரினவாதத்துக்கும், இனக் கலவரங்களுக்கும், தீ வைப்புக்கும், மதப் பிரிவினை வாதத்துக்கும் அதிகம் பெயர் போன உத்தரப் பிரதேச மானிலத்தில் இயங்கி வரும் ஒரு இஸ்லாமிய மதஸ்தளத்திற்குள் இந்துக்களும் போய் பூஜையில் ஈடுபடுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதானது கையில் நெருப்பை ஏந்திக் கொண்டு எரிபொருள் பரத்தப்பட்டுள்ள நிலத்தைக் கடந்து செல்லுமாறு கட்டளையிடுவதற்குச் சமமான மிக ஆபத்தானதொரு தீர்ப்பாகும். 


03. டில்லி மாநகரின் தெற்கே புறநகர் பகுதியில் மெஹ்ராலி எனும் ஊரில் அமைந்துள்ள 800 வருடத்திற்கும் அதிக கால வரலாற்றைக் கொண்ட அஹுன்ஜி மஸ்ஜித் (Akhunji Masjid) எனப்படும் பள்ளிவாசல் நேற்று முன் தினம் (30.01.2024) அதிகாலை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி டில்லி மாநகர மேம்பாட்டு அதிகாரசபையினால் (Delhi Development Authority) பாதுகாப்புத் துறையினரின் முழு ஒத்துழைப்புடன் இடித்துத் தரைமட்டமாக்கப்
பட்டுள்ளது. முகலாய
சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக் காலம் ஆரம்பமாவதற்கு சுமார் 300 வருட காலம் முன்பு டில்லி சுல்தானக இஸ்லாமியப் பேரரசின் ஆரம்ப கால ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்த ராzஸியா சுல்தானா என்ற பேரரசியின் ஆட்சிக் காலத்தில் (கி.பி 1230களில்) குறித்த பழைமை வாய்ந்த பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. 


800 வருட காலம் பழமை வாய்ந்த பள்ளிவாசலையும், அதன் வளாகத்திற்குள் அமைந்துள்ள மத்ரசா, பள்ளிவாசல் இமாமின் வீடு, மையவாடி என அனைத்தையும் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி, அதிகாலையில் 10இற்கும் மேற்பட்ட புல்டோசர் இயந்திரங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்புத் துறையினர் புடைசூழ்ந்த நிலையில் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு அவை சட்டவிரோதக் கட்டடங்களாகும், டில்லி மாநகரின் வணிக மேம்பாட்டுத் திட்டத்துக்கு அவை தடையாகவுள்ளன” போன்ற காரணங்களைக் கூறி இருப்பதானது மிகவும் அசிங்கமும், அபத்தமுமாகும். உடன் அங்கு வந்து சேர்ந்த மக்கள் குறித்த சம்பவத்தை ஆவணப்படுத்துவதற்காக தமது கைத் தொலைபேசிகளில் போட்டோ, வீடியோ செய்ய முயன்றவேலை அவரகளின் கைத் தொலைபேசிகளும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
குறித்த மஸ்ஜித் வளாகம் இடிக்கப்பட்டதற்கான தடையங்கள் மீடியா துறையினரின் கமராக்களுக்குள் சிக்கி விடாமல் இருக்க இடிப்புக் குப்பைகளை அவசர அவசரமாக அகற்றுவதில் DDA அதிகாரிகள் வேகமாக செயற்பட்டுள்ளனர். பள்ளிவாசலுக்குள் காணப்பட்ட குர்ஆன் பிரதிகள், கலைப் பொருட்கள், இமாமின் வீட்டு உபகரணங்கள், மத்ரசா மாணவர்களின் உபயோகப் பொருட்கள் என எதனையும் எடுத்துக்கொள்ள அனுமதிக்காது காட்டு அராஜகமொன்றையே அங்கு அரங்கேற்றியுள்ளனர். 


மத்திய (நாடாளுமன்றத்திற்கான) பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் இடம்பெறவுள்ள நிலையில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சியை நிறுவும் நோக்குடன் பெரும்பான்மை இந்து வாக்காளர்களை உசுப்பிட பேரினவாத BJP அரசு மேற்கொண்டு வரும் அயோக்கியத்தனங்களும், மத வெறித்தன செயறபாடுகளும் வட இந்திய முஸ்லிம் சமூகத்திற்குள் பெரும் அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது. 
வட இந்திய மானிலங்களில் காணப்படுகின்ற, நீண்ட கால வரலாற்றைக் கொண்ட மேலும் பல பள்ளிவாசல்களின் பெயர் பட்டியலொன்றும் உயர் அதிகாரம் கொண்ட இனவாத சக்தியொன்றின் கரங்களுக்குள் திணிக்கப்பட்டுள்ளதாக பல நடுநிலை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


பிராந்திய முஸ்லிம் சமூகமும், பேரினவாத BJP அரசை எதிர்த்து நிற்கும் சகோதர இந்து மக்களும் நேற்றும், இன்றும் காண்பித்து வரும் எதிர்புக்கள் காரணமாகவும், டில்லி வக்ப் வாரியம் உடன் செயற்பட்டு வழக்கொன்றைத் தாக்கல் செய்திருப்பதாலும், நடுநிலை மீடியாக்களின் செயற்பாடுகள் காரணமாகவும் நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ள டில்லி உச்ச நீதிமன்றம் இன்று 02.02.2024 Delhi Development Authority யிடம் குறித்த பள்ளிவாசல் இடிக்கப்படதற்கான விளக்கம் கோறியுள்ளது. 


இந்திய உபகண்டம் 700 வருட காலம் பல இஸ்லாமியப் பேரரசுகளால் திறம்பட ஆளப்பட்டுள்ளதுடன் உலக அரங்கில் பல்வேறு துறைகளிலு்ம் அப் பிராந்தியத்திற்கு மிகவும் பலமானதொரு முகவரியைக் குறித்த பேரரசுகள் தேடிக் கொடுத்துள்ளன. குறித்த பருவ காலங்களில் பேரரசுகளின் தலை நகரங்களாக பெரும்பாலும் ஆக்ரா, டில்லி, fபதேபூர் சீகிரி உள்ளிட்ட வட இந்திய நகரங்களே இருந்து வந்துள்ளன. குறித்த பேரரசுகளின் ஆட்சி கைமாற்றமடைந்து தற்போது வெறும் 165 வருட காலமே கடந்துள்ள நிலையில் இன்று அப்பிராந்தியத்தில் சிறுபான்மைச் சமூகமாக வசித்து வரும் முஸ்லிங்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை கண்ணீரை வரவழைக்கக்கூடியதாய் உள்ளது. 


வட இந்தியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட உலகின் அனைத்துப் பிராந்தியங்களிலும் வசித்து வரும் எமது உறவுகள் அனைவரையும் எமது பிரார்த்தனைகளில் சேர்த்துக் கொள்வோம். 
Ash Sheikh, Al Hafil Shafeeq Zubair 
Founder & Managing Drector of 
LAND OF LEARNING 
(Dedicated International Online Institute - Based in Sri Lanka)

Post a Comment

0 Comments