கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் ஜனாசா இன்று ஞாயிற்றுக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று இறுதி கிரிகைகள் இடம்பெற்றன.

மாளிகாவத்தை மையவாடியில் நடைபெற்ற இந்த இறுதிக் கிரியைகளில் ஏராளமான பொதுமக்கள்,அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயதான சிறுவன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சிறுநீர்த் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த சிறுவனை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பரிசோதித்தபோது, சிறுவனின் இடது சிறுநீரகத்தில் இருந்த குறைபாடு காரணமாக அவனது இடது சிறுநீரகத்தை நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

சத்திர சிகிச்சைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் இடது பக்க சிறுநீரகம் 9 வீதமும் வலது பக்க சிறுநீரகம் 91 வீதமும் செயற்பாட்டில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செயலிழந்து இருக்கும் இடது பக்க சிறுநீரகத்தை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை கடந்த வருடம், (24.12.2022) அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சத்திர சிகிச்சையை மருத்துவர் மலிக் சமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் மருத்துவர் நவீன் விஜயகோன் மேற்கொண்டுள்ளார்.


இந்த சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவனுக்கு சிறுநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட சிரமத்தைத் தொடர்ந்து மீண்டும் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஸ்கேன் பரிசோதனையில் இரண்டு சிறுசீரகங்களும் அகற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதன் பின்னர், சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தமது தரப்பில் தவறு நடந்ததை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டிருந்த இடது பக்க சிறுநீரகத்துடன் வலது பக்க சிறுநீரகமும் தவறுதலாக அகற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சிறுவனுக்கு எப்படியாவது சிறுநீரகம் ஒன்றை பொருத்தி அவனை குணப்படுத்துவதாக அந்த மருத்துவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர். இயந்திரத்தின் உதவியுடன் கடுமையான வலிகளுடன் சிறுவன் கடந்த ஏழு மாதங்களை கடத்தியுள்ளார். எனினும் இந்த விவகாரத்தை வெளியே கசிய விட வேண்டாம், தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று மருத்துவர்கள் வழங்கிய வாக்குறுதியை ஹம்தியின் பெற்றோர் முழுமையாக நம்பியிருந்துள்ளனர்.

அதன் பிரகாரம் அவர்கள் மருத்துவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். நாட்கள் செல்ல செல்ல மருத்துவர்கள் வழங்கியது வெறும் பொய் வாக்குறுதிகள் என்பது தெரிய வந்தது. அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். மருத்துவர்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் செய்வதறியாது தவித்தனர்.


இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை மாலை சிறுவன் ஹம்தி உயிரிழந்தார்.

ஒரு வாரகாலமாக “கோமா” நிலையிலிருந்த சிறுவன், விஷக் கிருமி உடலில் புகுந்ததால் ஏற்பட்ட மரணம் என வழமையாக விடுக்கும் அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.

மருத்துவமனையின் இந்த செயற்பாடு தகவல் கிடைத்தவுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நெட்வர்க் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விபரங்களை எடுத்துக் கூறினர். அதனையடுத்து ஊடகங்களில் இந்த விடயம் பேசுபொருளானது. 

ஊடகங்கள் சிறுவனுக்கு நடந்த அநீதிக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தவுடன் மருத்துவமனை பணிப்பாளர், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் சிறுவனின் சிறுநீரகங்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு சிறுநீரகங்களும் வெவ்வேறாக இல்லாமல் அதன் கீழ் பகுதிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் நிலை Horseshoe என்று அழைக்கப்படுகிறது. மருத்துவமனை பணிப்பாளர் கூறுவது போன்ற அமைப்பில் சிறுவனின் சிறுநீரகங்கள் இருக்கவில்லை என்பதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ பரிசோதனை அறிக்கைள் சான்றுகளாக இருக்கின்றன்றன.

அவ்வாறு சிறுநீரகங்கள் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்து அவை அகற்றப்பட்டிருந்தால், சத்திர சிகிச்சையின் பின்னர் மருத்துவ (Histopathology) பரிசோதனைக்கு இடது பக்க சிறுநீரகம் மட்டும் ஏன் அனுப்பப்பட்டது என்பதற்கான விளக்கத்தை மருத்துவமனையின் பணிப்பாளர் தெளிவு படுத்த வேண்டுமென சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த 25ம் திகதி டிசம்பர் மாதம் 2022 அன்று எடுக்கப்பட்ட குறித்த பெத்தொலொஜி அறிக்கையில் சிறுவனின் அகற்றப்பட்ட இடது சிறுநீரகம் பற்றிய தகவல்கள் மட்டுமே இருக்கின்றன. வலது பக்க சிறுநீரகம் தொடர்பான எந்த தகவல்களும் அந்த மருத்துவ அறிக்கையில் இல்லை. அப்படி இரண்டு சிறுநீரகங்கள் ஒன்றாக இணைந்திருந்து சத்திரசிகிச்சையின் போது தவறுதலாகவோ, தவிர்க்க முடியாமலோ அகற்றப்பட்டிருந்தால் அது பற்றி மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அப்படியான குறிப்புகள் ஏதும் அவற்றில் இல்லை.

இந்நிலையில் சிறுவனின் உடலை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனையடுத்து சனிக்கிழமை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைப் பணிப்பாளர் ஆகியோருடன் ஶ்ரீ லங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஊடகவியலாளர் அஷ்ரப் அலீ தொடர்புகளை ஏற்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்

இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று மாலை சிறுவனின் ஜனாசா விடுவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, மருத்துவக் கவுன்சில், சுகாதார அமைச்சு ஆகியவற்றில் முறைப்பாடுகளை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஷ்ரப் அலி

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T