Ticker

6/recent/ticker-posts

ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்!


ஜனாஸாக்களை மத கோட்பாட்டின்படி நல்லடக்கம் செய்வதில் முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் சந்தித்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது. 

அதன்படி, பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள குறித்த வர்த்தமானியில், இறப்புக்கான காரணம் மற்றும் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட பொருத்தமான ஆவணங்கள் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முடியும் என்றும் இறந்து ஏழு நாட்களுக்குள் இறப்புச் சான்றிதழ் பெறமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை மஸ்ஜித்கள் சம்மேளனமானது (ACMF) வீட்டிலேயே உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த ஜூன் 5ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து, குறித்த விடயங்கள் அடங்கிய முறைப்பாடொன்றை பிரதமரின் கீழ்வரும் பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்தது.

தேசிய முஸ்லிம் பேரவையின் (NMA) ஆலோசனையின் கீழ், அகில இலங்கை மஸ்ஜித்கள் சம்மேளன தலைவர் அஸ்லம் உத்மான், சம்மேளத்தின் பிரதித் தலைவர் K.R.A. சித்தீக் முதலானோர் பிரதமரை சந்தித்து, இப்பிரச்சினை தொடர்பில் சில ஆலோசனைகளை முன்வைத்தனர். அதன் அடிப்படையிலேயே இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து, இந்த அறிவித்தல் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, இலங்கையின் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதாக உள்ளதால், இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு என சம்மேளனத் தலைவர் அஸ்லம் உத்மான் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அவர், இலங்கையர்களாகிய நாங்கள், எங்கள் உறவினர்களை குறிப்பாக அவர்கள் வயதானவர்களாகவும், உடல்நலக் குறைவுடையவர்களாகவும் இருக்கும்போது அவர்களை பராமரிப்பதற்காக வளர்க்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மரணம் நேர்ந்தால், அவர்களது குடும்பத்தினர்கள் அந்தந்த மத மற்றும் மார்க்க நம்பிக்கைகளின்படி இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு, எந்த இடையூறும் தாமதமும் இல்லாமல் தமது காரியங்களை விரைவாகச் செய்ய இந்த அறிவிப்பு உதவுகிறது என்றும் கூறினார். 

கடந்த பல மாதங்களாக முஸ்லிம் சமூகத்தினர் மேற்படி பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். 

COVID-19 தொற்று நோய்களின்போது அறிவிக்கப்பட்ட பல விதிமுறைகள் காரணமாக தொற்று நோய்க்குப் பிந்தைய காலத்திலும் வீடுகளுக்குள் நிகழும் இறப்புகள் தொடர்பான விடயங்கள், அந்தந்த கிராம சேவகரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் காணப்பட்டன. 

இஸ்லாமிய கோட்பாட்டின்படி, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இறந்து 24 மணிநேரத்துக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இத்தகைய மத கோட்பாட்டுக்கிணங்க ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு, இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவல நிலை காணப்படுகிறது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பான இந்த வர்த்தமானி அறிவித்தல் முஸ்லிம் சமூகத்தவருக்கு ஆறுதல் அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், முன்னாள் அமைச்சர் பேரியல் இஸ்மாயில் அஷ்ரப், தேசிய முஸ்லிம் பேரவையின் உப தலைவர் அப்சல் மரிக்கார் ஆகியோர் ஜனாஸா நல்லடக்கம் குறித்து அகில இலங்கை மஸ்ஜித்கள் சம்மேளனத்துக்கு ஆலோசனை வழங்குவதில் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments