காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு மற்றும் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றின் தலைவரான ஏ.ஜே.அப்துர் ரவூப் மௌலவி முன்வைத்து வரும் மார்க்க கொள்கை தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தயாராக உள்ளதாக உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலான முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த 5ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் இறுதியில் காத்தான்குடியினைச் சேர்ந்த மௌலவி அப்துர் ரவூபிற்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் 40 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட பத்வா தொடர்பில் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதியின் இக்கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு உலமா சபைத் தலைவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“இஸ்லாமிய கொள்கைக்கு முரணாக பேசியமையினாலேயே மௌலவி அப்துர் ரவூபிற்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் பத்வா வழங்கப்பட்டது.
“எல்லாம் இறைவன்” எனும் கொள்கையினை அவர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் முன்வைத்தார். இது இஸ்லாத்தில் பிழையானதொரு கோட்பாடாகும். இந்த கொள்கை முஸ்லிம் சமூகத்தில் அச்சமயத்தில் பாரிய சர்ச்சையினை ஏற்படுத்தியது.
மௌலவி அப்துர் ரவூப் கல்வி கற்ற இலங்கையின் பழைமை வாய்ந்த அரபுக் கல்லூரியில் அவரின் ஆசான்களாக இருந்த அஜ்வாத் ஆலிம், அப்துல் சமத் ஆலிம் உள்ளிட்ட பல மூத்த உலமாக்களினாலேயே அவருடைய கொள்கை வழிகேடு என்றும், இஸ்லாமிய கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானது என்றும் பத்வா வழங்கப்பட்டது.
எனினும் உள்நாட்டில் வழங்கப்பட்ட பத்வாக்களை ஏற்றுக்கொள்ள மௌலவி அப்துர் ரவூப் அச்சமயத்தில் மறுத்துவிட்டார். இதனால், குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற எகிப்து அல் -அஸ்ஹர் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் லக்னோவிலுள்ள நத்வதுல் உலூம் அரபுக் கல்லூரி ஆகியவற்றுக்கு இந்த விடயம் அனுப்பப்பட்டு பத்வா கோரப்பட்டது.
இக்காலப் பகுதியில் எம்.எச். முஹம்மத், கலாசார அமைச்சராக இருந்தமையினால் அவரின் ஏற்பாட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாகவே இந்த பத்வா கோரப்பட்டுள்ளது.
அங்கிருந்தும் இக்கொள்கை வழிகேடு என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் “எல்லாம் இறைவன்” எனும் கொள்கைக்கு எதிராக பத்வா வழங்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த கொள்கையினை வாபஸ் பெறுவதாக மௌலவி அப்துர் ரவூப் அப்போது அறிவித்தார். எனினும், சில காலங்களின் பின்னர் இந்த கொள்கையினை மீண்டும் அவர் பேச ஆரம்பித்தார்.
பின்னர் அதனை வாபஸ் பெற்றுக்கொண்டார். இது போன்று பல தடவைகள் பேசுவதும், நிறுத்திக் கொள்வதுமாக இந்த விவகாரம் நீடித்துச் செல்கிறது.
இந்த கொள்கையை அவர் பேசாமல் விடுவதே சிறந்ததாகும். எனினும் இந்த விடயம் தொடர்பில் அவருடன் பேச்சு நடத்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எப்போதும் தயாராகவே உள்ளது” என றிஸ்வி முப்தி, ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன் அவை தொடர்பில் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments