Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க போர் விமானங்களால் துரத்திச் செல்லப்பட்ட விமானம் வீழ்ந்து நொறுங்கியது; நால்வர் பலி


அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டிசியில் கட்டுப்பாடுகள் கொண்ட வான்பரப்பில் பறந்த தனியார் விமானமொன்றை போர் அமெரிக்கப் போர் விமானங்கள் துரத்திச் சென்ற நிலையில், அத்தனியார் விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. 

இவ்விமானத்தில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

செஸ்னா (Cessna 560 Citation V) ரக விமானமொன்றே வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ளூர் நேரப்படி ஞாயிறு பிற்பகல் 3.30 மணியளவில் இவ்வாறு வீழ்ந்து நொறுங்கியது.

டென்னஸி மாநிலத்தின் எலீஸாபெத்டவுன் நகரிலிருந்து ஞாயிறு பிற்பகல் 1.14 மணியளவில் நியூயோர்க் நகரின் லோங் ஐலண்ட் பிராந்தியத்தை நோக்கி இவ்விமானம் புறப்பட்டது. எனினும் பின்னர் அது திசைதிரும்பி தலைநகர் வொஷிங்டன் டிசியில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட பகுதிக்குள் பிரவேசித்தது.

அவ்விமானத்தின் விமானி, பதிலளிக்காத நிலையில், இவ்விமானத்தை விலகிச் செல்ல வைப்பதற்காக இரு போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. ஒலியைவிட அதிக வேகத்தில் அவ்விமானங்கள் பறந்ததால் ஏற்பட்ட ஒலி அதிர்வு ( Sonic boom/ சொனிக் பூம்) வொஷிங்டன் டிசி நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில மணித்தியாலங்களின் பின்னர், வொஷிங்டன் டிசிக்கு அருகிலுள்ள வேர்ஜீனியா மாநிலத்தில் அவ்விமானம் வீழ்ந்து நொறுங்கியது.

இவ்விமானம் எவ்வாறு வீழ்ந்தது என்பது தெரியவில்லை. படையினரின் அழைப்புகளுக்கு செஸ்னா விமானத்தின் விமானி ஏன் பதிலளிக்கவில்லை என்பதும் தெரியவில்லை. 

இவ்விமானம் சுட்டுவீழ்த்தப்படவில்லை எனவும், அது வீழ்ந்தமைக்கு போர் விமானங்கள் காரணமாகவில்லை எனவும் தம்மை அடையாளம் காட்ட விரும்பாத இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.



மேற்படி விமானம் புளோரிடா மாநிலத்திலுள்ள 'என்கோர் மோட்டோர்ஸ் ஒவ் மெல்பேர்ன்' எனும் நிறுவனமொன்றினால் பதிவு செய்யப்பட்டதாகும்.

இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஜோன் ரம்பெல் (75)இது தொடர்பாக கூறுகையில், தனது மகள், 2 வயதான பேத்தி, பணிப்பெண் ஆகியோர் அவ்விமானத்தில் பயணம் செய்தனர் எனக் கூறியுள்ளார். (‍வைப்பகப்படம்)

Post a Comment

0 Comments