கொழும்பில் வேலை செய்யும் தனது தந்தையை பார்ப்பதற்கு அதிகாலை வேளை துவிச்சக்கரவண்டி மூலம் செல்ல முயன்ற சிறுவனை மீட்ட கல்முனை தலைமையக பொலிஸார் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் 10 வயதுடைய சிறுவன் தனது தாயாருக்கு தெரியாமல் வீட்டை விட்டு அதிகாலை வேளை சென்றுள்ளார்.

இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறிய குறித்த சிறுவன் துவிச்சக்கரவண்டி ஒன்றை பெற்று அக்கரைப்பற்று நகருக்கு சென்று பின்னர் பஸ்ஸில் கல்முனை பகுதிக்கு வந்து தனியாக நடமாடி திரிந்துள்ளார்.

இவ்வாறு தனியாக ஒரு சிறுவன் பெரிய பாடசாலை பையுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதை அவதானித்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதன் போது குறித்த தகவலுக்கு அமைய விரைந்து செயற்பட்ட பொலிஸ் குழு அச்சிறுவனை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதன் போது அச்சிறுவன் தனது தந்தை கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாகவும் அவரை பார்ப்பதற்கு துவிச்சக்கரவண்டியில் அங்கு செல்வதற்கு தயாரானதாக குறிப்பிட்டார்.

உடனடியாக குறித்த சிறுவனிடம் தகவல்களை பெற்ற பொலிஸார் சிறுவனின் தாயாரை அழைத்து சிறுவனை ஒப்படைத்துள்ளதுடன் சிறுவனுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினர்.

இவ்விடயம் தொடர்பில் சிறுவனின் தாயாரும் சிறுவனை மிக அக்கறையுடன் பார்த்துக்கொள்வதாக பொலிஸார் முன்னிலையில் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக நாட்டில் சிறுவர் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் பெற்றொர்கள் தத்தமது பிள்ளைகளில் அக்கறையுடன் கண்கானிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் தெரிவித்துள்ளார்.

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T