Ticker

6/recent/ticker-posts

அட்லாண்டிக் சமுத்திரத்தில் சுமார் நான்கு கிலோ மீட்டர்


 உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒரு சிலர் தமது இறுதி மூச்சை விடுவதற்குரிய இடமாக அட்லாண்டிக் சமுத்திரத்தில் சுமார் நான்கு கிலோ மீட்டர் அடியாழத்தில் உள்ள ஒரு பிரதேசம் குறித்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. 112 வருடங்களுக்கு முன்னர் 1500க்கும் அதிகமான மனித உயிர்களுடன் ஜலசமாதி கண்ட டைட்டானிக் கப்பலுக்கு, டைட்டன் எனும் பெயரிலான ஒரு சின்னஞ்சிறு submersible ஐந்து பணக்காரர்களுடன் துணைப் பிணமாக சென்றிருக்கிறது.

டைட்டன் ஒரு நீர்மூழ்கி (Submarine) கிடையாது. அது ஒரு submersible. இரண்டுக்கும் இடையிலான வித்தியாசமானது தனது சகல வேலைகளையும் யாருடைய உதவியுமில்லாமல் தன்னந்தனியே செய்து கொள்ள முடியுமான கட்டுமஸ்தான ஒரு வாலிபனுக்கும், தனது சகல தேவைகளுக்காகவும் தாயில் தங்கியிருக்கும் ஒரு குழந்தைக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும்.

ஒரு நீர்மூழ்கியானது துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது முதல் மீண்டும் துறைமுகத்துக்குத் திரும்பி வரும் வரையில் தனது சகல தேவைகளையும் தானே நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு பலசாலியாகும். ஆனால் இந்த submersible வகையறாக்கள் எப்போதும் தமது தாய்க் கப்பலில் முழுமையாகத் தங்கியிருக்கின்றன. கடலுக்குள் அமிழ்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முதற் கொண்டு, கீழே இருந்து மீண்டும் மேலே தூக்கியெடுப்பதற்கான வேலைகள் வரையில் தாய்க் கப்பலின் தயவு இல்லாமல் இவற்றால் எதுவும் பண்ண முடியாது. நமது டைட்டன் submersible உம் துருவ இளவரசன் (Polar Prince) எனும் தாய்க் கப்பலின் தயவிலேயே இந்த ஆட்டத்தில் குதித்திருந்தது.

269 மீட்டர் நீளமும் 29 மீட்டர் அகலமும் கொண்ட டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக்கின் ஆழத்தில் சமாதி கொண்டிருக்கின்றது. உலகில் எதனை வைத்தெல்லாம் பணம் பண்ண முடியுமென்று யோசிக்கும் கார்பரேட் சிந்தைக்கு, கடலில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்திலிருக்கும் இதன் சிதிலங்களும் கூட ஒரு முதலீடுதானே!

பணம் அதிகரிக்கும் போது மனிதர்களுக்கு ஒரு வகையான பைத்தியம் ஏற்படும். அது உலகின் மிக மோசமான போதையால் ஏற்படும் பைத்தியமாகும். அந்தப் போதைக்கு ஆட்பட்டவுடன் முட்டாள்தனங்கள் யாவும் adventures ஆகத் தோன்றும். 

பற்தூரிகையின் மீது வைக்கப்பட்ட பற்பசையின் தோற்றத்தில், வெறும் 22 மீட்டரே நீளமான, உள்ளே இருந்து திறக்க முடியாத வகையில் வெளிப்புறத்தால் சீல் வைக்கப்பட்ட, தன்னளவில் இயக்கப்படும் சக்தி எதுவுமற்ற ஒரு கெப்ஸூலில், உலகின் பில்லியனர்கள் சிலர் அடுத்த 96 மணித்தியாலங்களுக்கான ஒக்ஸிஜனுடன் மாத்திரம், எழுந்து நடமாடவோ நகர்ந்து உட்காரவோ வசதியில்லாமல், கால் மடித்து நெருங்கி உட்கார்ந்து கொண்டு, ஆழ்கடலின் காரிருளுக்குள், ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, அதிகரித்துச் செல்லும் நீரின் அழுத்தத்துக்குள் பிரவேசித்து, உடைந்த அமிழ்ந்த கப்பலொன்றின் எஞ்சிய பாகங்களைப் பார்த்து வர சுற்றுலா செல்வதை வேறு எப்படித்தான் விபரிக்கலாம்?! அதுவும் ஒருவருக்கான கட்டணம் 250,000 அமெரிக்க டாலர்கள். சுமார் எட்டுக் கோடி இலங்கை ரூபாய்கள்.

“பூமியின் எந்தப் பகுதியில் தான் மரணிப்பேன் என்பதை எவரும் அறிய மாட்டார்” என அல்குர்ஆன் கூறுவது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் போய் மரணிக்கும் போது இந்த வசனத்துக்கான விளக்கம் புரிவதை விட, இப்படிக் கோடிக் கணக்கில் செலவழித்துக்கொண்டு போய், ஆழ்கடலில் ஒருவன் மரணிக்கும் போது தலையில் ஆணியடித்தது போல் அதன் விளக்கம் புரிகிறதல்லவா?!

பணத்தின் போதை தரும் பைத்தியக்காரத்தனத்துக்கும், கார்பரேட் முதலையின் தீராப் பணப் பசிக்கும் மத்தியில் ஐவருக்கான நேரமும் இடமும் குறிக்கப்பட்டிருந்திருக்கிறது.

அவர்கள் தமக்கென குறிக்கப்பட்ட நேரத்தில் தமக்கென குறிக்கப்பட்ட இடத்தை நோக்கிச் சென்றிருக்கிறார்கள்.

வெளியால் சீல் வைக்கப்பட்ட அந்தக் கெப்ஸூல், தண்ணீரின் அதீத அழுத்தம் காரணமாக, பயங்கரமாக உள்நோக்கி (implode) வெடித்திருக்கிறது.

சிந்திப்போருக்கு இதில் பெரும் அத்தாட்சிகள் இருக்கின்றன. 

நூற்றுக் கணக்கான கேள்விகளை டைட்டன் விட்டுச் சென்றிருக்கிறது. ஆனானப்பட்ட டைட்டானிக் விட்டுச் சென்ற கேள்விகளே இன்னும் அதன் சிதிலங்களோடு சிதிலங்களாக ஆழ்கடலில் உப்புத் தவத்தில் இருக்கையில், இத்தனூன்டு டைட்டன் விட்டுச் சென்ற கேள்விகளுக்கு மட்டும் பதில் கிடைத்து விடுமாக்கும்!

அந்தக் கேள்விகளைக் கேட்கப் போய் அநியாயத்துக்கு ஒரு conspiracy theorist பட்டத்தை வாங்கிக் கொள்ளாமல், நாம் அப்படிக்கா போய் விடுவோம்.


தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T



Post a Comment

0 Comments