யூ.எல். மப்றூக்
பதவி,பிபிசி தமிழுக்காக

பெண்களைப் போன்று அலங்காரம் செய்து, ஆடைகள் அணிந்து 'மாடலிங் ஷோ' ஒன்றில் போட்டியிட்ட றிஸ்வான், அதற்காக கொலை மிரட்டலை சந்திக்கிறார்.


ஆணாகப் பிறந்த இவர், தன்னை அதிகம் பெண்ணாக உணர்வதாகக் கூறுகின்றார். இலங்கையைச் சேர்ந்தவரான றிஸ்வான் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டதாரி.


அழகுக் கலையினை கற்று - அதைத் தொழிலாகவும் செய்து வருகிறார். இவருக்கு இப்போது 31 வயதாகிறது. பெண்களைப் போன்று தன்னை அலங்காரம் செய்து கொண்டு, நளினங்களை வெளிப்படுத்தும் றிஸ்வான் - ஒரு திருநங்கையாகப் பார்க்கப்படுகின்றார்.


இந்த நிலையில், தனது விருப்பம் போல் ஆடையுடுத்தி, அலங்காரம் செய்து வாழ்வதில், பல்வேறு சவால்களை - தான் எதிர்கொண்டு வருவதாக றிஸ்வான் கூறுகின்றார். அண்மையில் அவர் - மாடல் நிகழ்ச்சியொன்றில் பெண்களைப் போல் ஆடையுடுத்தி, அலங்காரம் செய்து பங்கேற்றதால், தமது மதத்தவர்கள் சிலரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளையும் கொலை மிரட்டலையும் எதிர்கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

”கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் நடத்தப்படும் - மூன்று மாதங்களைக் கொண்ட மாடலிங் கற்கையொன்றில் சேர்ந்தேன். எங்கள் கற்கை முடிந்தபோது, அங்கு படித்தவர்களைக் கொண்டு, மாடல் நிகழ்ச்சியொன்று (Model Show) நடத்தப்பட்டது. அதில் 500 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 350 பேர் பெண்கள்.


அதில் நானும் - பெண்களைப் போன்று ஆடைகளை அணிந்து, பெண்களைப் போலவே அலங்காரம் செய்து, ஒரு மாடலாகக் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சி சமூக ஊடகங்களில் ஒளிபரப்பானது. அதனைப் பார்த்தவர்களில் சிலர், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டி, மிரட்டினர்.

கொலை மிரட்டல் விடுத்தனர். என்னை கல்லெறிந்து கொல்ல வேண்டுமென சமூக ஊடகங்களில் எழுதினார்கள். இதனால், நான் வெளியூரில் சில நாட்கள் மறைந்திருக்க வேண்டியேற்பட்டது" என்கிறார் றிஸ்வான்.இஸ்லாமுக்கு விரோதமாக இருப்பதாக குற்றச்சாட்டு

இஸ்லாத்துக்கு விரோதமாக றிஸ்வான் நடந்து கொள்வதாகக் கூறியே அதிகமாக அச்சுறுத்தப்பட்டுள்ளார். ”என்னை அச்சுறுத்தியவர்களில் அரசியல் பின்னணியைக் கொண்டவர்களும், தொழில் போட்டியாளர்களும் இருந்தனர். நான் தற்போது வாடகை வீட்டில் தங்கியிருக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த சிலரும், அவர்களின் ஊருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறி மிரட்டினார்கள்" என்றும் றிஸ்வான் கூறுகிறார்.


நுவரெலியா மாவட்டம் - ஹபுகஸ்தலாவைச் சேர்ந்த றிஸ்வான், பல வருடங்களாகவே, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் வாடகை வீடுகளில் தங்கி வருகிறார். அவர் எதிர்கொள்ளும் இவ்வாறான நெருக்கடிகள் காரணமாக, பல வீடுகள் மாறிவிட்டார். மாடலிங் நிகழ்சியில் கலந்து கொண்ட பின்னர், சமூக ஊடகங்களில் இவர் கடுமையாக தூசிக்கப்படுவதை இப்போது பார்க்க முடிகிறது.

“அந்த மாடலிங் நிகழ்ச்சி ஒரு போட்டியாக நடைபெற்றது. அதில் ஜொலிக்கும் ஒருவராக நான் இருக்க வேண்டும் என்றும், எனது முகம் எங்கும் பார்க்கப்பட வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். அதற்காக நான் அனுதாபத்தை உருவாக்கவில்லை - உழைத்தேன். நான் ஆசைப்பட்டது போன்றே நடந்தது. அந்தப் போட்டியில் எனக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன" என்கிறார் றிஸ்வான்.

"இவ்வாறான நிகழ்வுகள், சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகமானோரை நான் சென்றடைந்திருந்தாலும், எனக்கான அங்கிகாரம் இன்னும் கிடைக்கவில்லை. கேலியும் கிண்டல்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. என்னுடன் 'செல்பி' எடுத்துக் கொள்ள விரும்புவோர் கூட, என்னை ஓரமாக அழைத்துச் சென்றுதான் படமெடுத்துக் கொள்கின்றனர். நிலைமை மாறவில்லை, அப்படியேதான் இருக்கிறது" என தனது ஆதங்கத்தை றிஸ்வான் வெளிப்படுத்தினார்.

குறித்த மாடலிங் நிகழ்ச்சியில் பெண்போல உடுத்தி, ஒப்பனை செய்யுமாறு தனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியை கேட்டுக் கொண்டதாகவும் அதற்கிணங்கவே அவ்வாறு - தான் நடந்து கொண்டதாகவும் கூறும் றிஸ்வான், ”அது எனக்கும் பிடித்திருந்தது” என்கிறார்.



இருந்தபோதிலும் தனது பாலின அடையாளம் என்ன என்பதை அறிதியிட்டுக் கூறுவதில், றிஸ்வான் குழப்ப நிலையில் இருந்தமையை, அவருடனான உரையாடலின் போது விளங்கிக் கொள்ள முடிந்தது.

”எல்லோருக்குள்ளும் ஆண்களுக்குரிய ஹார்மோன்களும் சுரக்கின்றன, பெண்களுக்குரிய ஹார்மோன்களும் சுரக்கின்றன. எனக்குள் பெண்ணுக்குரிய ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதாக நான் உணர்கிறேன்” என்று கூறும் றிஸ்வான், ஒரு 'திருநங்கை'யாக தான் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்கிறார்.


”என்னை 'குயர்' (queer) சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக அடையாளப்படுத்திக் கொள்ளவே இப்போதைக்கு நான் விரும்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அது என்ன 'குயர்' சமூகம்?



பாலின அடையாளங்களில் 26 வகைகள் உள்ளன என்கிறார் மனித உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவ செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா.

"றிஸ்வான் தொடர்பாக - நான் வாசித்தவை, கேட்டவை, பார்த்தவை மற்றும் அவரின் பேட்டிகளின் அடிப்படையில் கூறுவதாயின், அவரின் பாலின அடையாளம் எது என்பதை சரியாகத் தீர்மானிக்க முடியாத நிலையில் அவர் இருக்கிறார் போல் தெரிகிறது” என, நளினி ரட்ணராஜா கூறுகிறார். அவ்வாறானவர்களே 'குயர்' (பால் புதுமையினர்) என அழைக்கப்படுகின்றனர்.


”தான் ஆணாக வாழ்வதா, பெண்ணாக வாழ்வதா என்பதிலும் தனது உடல் தோற்றம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதிலும் - தளம்பலான மனநிலையில் றிஸ்வான் இருக்கின்றமையை விளங்கிக் கொள்ள முடிகிறது” எனவும் நளினி கூறுகின்றார்.


”உதாரணமாக கூறுவதாயின், இவ்வாறானவர்கள் ஆண் உறுப்புடன் இருப்பர். பெண் ஒருவருடன் உடலுறவு கொள்வதில் நாட்டமுடையவராகவும் இருக்கலாம். ஆனால் பெண்கள் போலவே உடுப்பதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் விருப்பமுடையவராகவும் இருக்கக் கூடும். இந்த தேர்வு தனிப்பட்ட உரிமை. அவற்றினை ஏனையோர் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆடை, அலங்காரங்கள் போன்றவை மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டவை. அவற்றை ஆண்களுக்கானவை என்றும் பெண்களுக்கானவை என்றும் மனிர்களே வகுத்து வைத்திருக்கின்றனர். இதனை மீற நினைக்கிறவர்கள் மீது, ஏனையோர் ஆதிக்கம் செலுத்த முடியாது” என நளினி வலியுறுத்துகிறார்.

படக்குறிப்பு,

நளினி ரட்ணராஜா


தனது பாலின அடையாளத்தை, இறக்கும்வரை புரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்தவர்களும் இருந்துள்ளனர் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.


”ஆண் உறுப்போடும், ஆண் அடையாளத்தோடும் பிறந்தவர்கள் - சமூகத்தில் ஆண்களுக்காக வகுத்து வைக்கப்பட்டிருக்கும் நடை, உடை மற்றும் பாவனைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதேபோன்று பெண்ணுறுப்புடன் பிறந்தவர்கள், சமூகம் கட்டமைத்த விதியின் படி, பெண்ணாக தன்னை உருவகித்துக் கொள்ள வேண்டுமென்கிற அவசியங்களுமில்லை. அது அவரவர் விருப்பத்திலும் தங்களை அவர்கள் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் முறையிலுமே தங்கியுள்ளது. அந்த வகையில் றிஸ்வான் ஆணாகப் பிறந்திருந்தாலும், பெண் போன்று தன்னை அலங்கரித்துக் கொள்ள விரும்புகின்றார்” என்கிறார் நளினி.

ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அவருடைய தீர்மானத்தின் படியே விட்டுவிடுதல் வேண்டும் எனக் கூறும் நளினி ரட்ணராஜா. ”அவர் ஒரு மனிதர், அவருக்குள் திறமைகள் உள்ளன, அவர் எப்படி விரும்புகின்றாரோ அப்படியே வாழட்டும். அதை ஏற்றுக் கொள்வதில் நமக்கு என்ன பிரச்சினை உள்ளது” எனவும் கேள்வியெழுப்புகின்றார்.


”ஒவ்வொருவரின் கைரேகை அடையாளங்களும் எவ்வாறு தனித்துவமானவையாக உள்ளனவோ, அதுபோலவே ஒவ்வொருவரின் தேர்வுகளும், விருப்பங்களும் தனித்துவமானவையாகும். எனவே, ஒருவர் தனது தேர்வுகளையும் விருப்பங்களையும் இன்னொருவர் மீது திணிக்க முடியாது” என, அழுத்திக் கூறுகின்றார் நளினி.

"இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது"



இதேவேளை, ஒருவர் விரும்பியவாறு வாழ்வதற்கான உரிமையினை நாட்டின் தாய்ச் சட்டமான அரசியலமைப்பே அனுமதித்திருக்கும் நிலையில், தனது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு மற்றவர்கள் தடையேற்படுத்துவது எவ்வகையில் நியாயமாகும் என, றிஸ்வான் கேட்கிறார். சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் இவர், ”நிச்சயமாக நான் ஒரு சட்டத்தரணியாகி, எனது உரிமைகளுக்காக இன்னும் வலிமையுடன் போராடுவேன்” என்கிறார்.

”எனது ஆடை, அலங்காரங்களை - இஸ்லாமிய ரீதியாக 'பாவச்செயல்' என சிலர் கூறுகின்றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகத்தினுள் பரவியுள்ள போதைவஸ்து உள்ளிட்ட பாரிய குற்றங்களை - ஏன் இவ்வாறானவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர்” என றிஸ்வான் ஆதங்கப்படுகிறார்.

”ஒரு பெண்ணாக மாறுவதற்கோ, அதற்கான சத்திர சிகிச்சைகளைச் செய்து கொள்வதற்கோ, இப்போதைக்கு எந்தவித எண்ணங்களும் எனக்கு இல்லை. ஆனால், அதற்கான விருப்பம் இல்லாமலுமில்லை. இருந்தபோதும் இப்போதுள்ள வாழ்க்கை முறை எனக்குப் பிடித்திருக்கிறது" என அவர் கூறுகின்றார்.

றிஸ்வானுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, காதல் மற்றும் காதலர் குறித்து அவர் பேசியதால், ”உங்கள் காதலர் எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்” எனக் கேட்டோம்.

”கடந்த காலங்களில் எனது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் நான்கு பெண்களுடன் காதல் உறவில் இருந்தேன். ஆனால் அவை குறுகிய காலங்களிலேயே இல்லாமல் போய்விட்டன. என்னைக் காதலித்தவர்கள் என்னை மாற்ற நினைத்தனர். முடியாதபோது, பிரிந்து போய்விட்டார்கள்” என பதிலளித்தார் றிஸ்வான்.

”திருமணம் முடிக்கும் ஆசை இருக்கிறதா”?

"இல்லை”

”இப்படியொரு முடிவுக்கு என்ன காரணம்” எனக் கேட்டோம்.

றிஸ்வான் சிரித்தார். சற்று நேரம் மௌனமாக இருந்தார். அவர் எதையோ யோசிக்கின்றார் போல் தெரிந்தது. பின்னர் பேசத் தொடங்கினார், ”கல்யாணம் கட்டும் ஆசை இப்போதைக்கு இல்லை. படிக்க வேண்டும், எனது தொழிலை விரிவாக்க வேண்டும்”.


இப்போது ஆசையில்லை என்றால், எதிர்காலத்தில் அந்த விருப்பம் வரலாம் என எடுத்துக் கொள்ளலாமா? என, றிஸ்வானிடம் கேட்டோம்.

”எனது வாழ்க்கை எவ்வாறு மாறும் என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதற்கு யாராவது ஒரு பெண் விரும்பினால், திருமணம் பற்றி யோசிக்க முடியும். ஆனால், எனது தோற்றம் எனது தொழில், நடவடிக்கைகளை மாற்றுவதற்கு அவர் முயற்சிக்கக் கூடாது” என்றார்.

றிஸ்வானிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரின் தந்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அந்த அழைப்பில் அவரின் தாயும் பேசினார். எல்லாவற்றையும் உதறிவிட்டு - வீட்டு வருமாறு அவர்கள் தன்னை அழைத்ததாக றிஸ்வான் நம்மிடம் கூறினார்.

”ஊருக்குச் சென்றால் - நான் நினைத்தபடி என்னால் வாழ முடியாது, எனது கனவுகளை அடைவதற்கு - அது தடையாக இருந்துவிடும். அப்படியென்றால், இத்தனை காலமும் நான் பட்ட கஷ்டங்களுக்கு என்னதான் அர்த்தம்?” என்று கேட்கிறார் றிஸ்வான்.

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5