Ticker

6/recent/ticker-posts

எதிர்காலத்தில் நேட்டோவில் உக்ரேன் அங்கம் வகிக்கும்: நேட்டோ செயலாளர் நாயகம்

உக்ரேன் எதிர்காலத்தில் நேட்டோவின் அங்கத்துவ நாடாகும் என நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார்.

பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள ஸ்டோல்டென்பேர்க், அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

நீண்ட காலத்தின்பின் நேட்டோவின் அங்கத்துவத்தை உக்ரேன் பெறும் என ஸ்டோல்டென்பேர்க் கூறினார். ஆனால், ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், ஒரு சுதந்திர நாடாக உக்ரேன் நீடித்திருக்க வேண்டும் என்பது உடனடியான முக்கிய விடயமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

'உக்ரேன் எமது அங்கத்துவ நாடாக மாறும் என்பதில் நேட்டோ அங்கத்துவ நாடுகள் இணக்கம் கண்டுள்ளன. ஆனால், அது நீண்ட கால முன்னோக்கிலானது' என அவர் குறிப்பிட்டார்.

பின்லாந்து, சுவீடன் ஆகியனவும் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில், நேட்டோ செயலாளர் நாயகம் பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உக்ரேன் அங்கம் வகிக்கும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் நேற்றுமுன்தினம் கூறியமை குறிப்பிடத்தக்கது.


நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க், பின்லாந்து பிரதமர் சனா மரீன் 

ரஷ்யாவுடனான யுத்தத்தில் மேற்கு நாடுகளின் உதவியுடன் யுக்ரைன் வெல்லும். எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அங்கத்துவ நாடாக யுக்ரைனுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது' என சனா மரீன் கூறினார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், போர்க் குற்றங்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் சனா மரீன் கூறினார்.

Post a Comment

0 Comments