கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.


"கரவிட்ட சியா" என்ற புனைப்பெயர் கொண்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் உள்ள கடையொன்றின் உரிமையாளரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் என மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கடை உரிமையாளரின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.


அதனடிப்படையில் குறித்த சந்தேகநபர் ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


அந்த நடவடிக்கையின் போது சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், பதில் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த சந்தேக நபர் அவிஸ்ஸாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்