Ticker

6/recent/ticker-posts

ஐஸ் தகராறில் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் உடல்கள் தோண்டியெடுப்பு



ஐஸ் போதைப்பொருள் தகராறில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரால் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டு அவர்களின் வீட்டிற்கு அருகில் புதைக்கப்பட்ட சம்பவத்தின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விசாரணையின் முதல் கட்டமாக கேகாலை நீதவானின் உத்தரவையடுத்து, சடலங்களைத் தேடுவதற்காக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை இரு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மொஹமட் அன்வர் மொஹமட் அர்ஷாத் மற்றும் மொஹமட் இக்பால் மொஹமட் அஸ்ஹர் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நவம்பர் 18 மற்றும் 25 ஆம் திகதிகளில் இருந்து இவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்படி, கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இளைஞர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த இளைஞர்கள் ரம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடம் போதைப்பொருள் பெற வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அங்கு ஏற்பட்ட மோதலின் பின்னர் போதைப்பொருள் வியாபாரியால் இந்த இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ரம்புக்கனை ஹுரிமலுவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரின் வீட்டில் இளைஞர்களை கொன்று கோழிக்கூட்டிற்கு அடியில் புதைத்துள்ளதாகவும், அதற்கமைய குறித்த வீட்டின் சந்தேகத்திற்கிடமான பகுதியில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கேகாலை பொது வைத்தியசாலையின் நீதவான் மற்றும் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோரின் மேற்பார்வையில் நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அகழ்வு நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் மற்றைய இளைஞனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments