Ticker

6/recent/ticker-posts

சீனாவில் கொரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரிப்பு - இலங்கை கண்காணிப்பைவலுப்படுத்தவேண்டும் என கோரிக்கை


சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளமை சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச விநியோகத்திற்கான பாதிப்பு குறித்தும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் ஆபத்தான புதிய கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தால் மாத்திரமே 2020 போன்ற சூழ்நிலை ஏற்படும் என கருத்து வெளியிட்டுள்ள நிபுணர்கள் அதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க மறுத்துள்ளனர்.

பலநாடுகளில் கொரோனாவின் பல்வேறுபட்ட மாதிரிகள் காணப்படுகின்றன ஆகவே புதிய வைரஸ் தோன்றினால் மாத்திரமே பெருந்தொற்று ஆபத்து மீண்டும் ஏற்படும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

எனினும் வெவ்வேறு வைரஸ்கள் தோன்றக்கூடிய ஆபத்துள்ளது இதன் காரணமாக நாங்கள் கண்காணிப்பை பலப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் தற்போது அதிகளவு கொரோனா நோயாளர்கள் சீனாவிலேயே நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில மாதங்களில் 800 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அரை மில்லியன் மக்கள் உயிரிழக்ககூடும் என என்பிஆர் தெரிவித்துள்ளது.

மரபணுவரிசை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை இலங்கை வலுப்படுத்தவேண்டும் என பேராசிரியர் மாலவிகே தெரிவித்துள்ளார்.

மூன்று வாரத்திற்கு முன்னர் நாங்கள் இறுதியாக மரபணு ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்,தற்போது இதற்கான மாதிரிகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் இன்புளுன்சா பிரச்சினை உள்ளது ஆனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்

உலகின் ஏனைய பகுதிகளில் குறைந்தளவு நோயாளர்கள் அடையாளம் காணப்படும் அதேவேளை சீனாவில் அதிகளவு நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் இதுவே பிரச்சினை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வைரஸ் உருவாவதற்கான மிகவும் பொருத்தமான சூழ்நிலை இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments