Ticker

6/recent/ticker-posts

என்னை பகைத்துக் கொண்டால் இருக்க விடமாட்டேன் ; டயானா கமகே


இராஜதுரை ஹஷான்)


ஐக்கிய மக்கள் சக்தியினர் எனது குடியுரிமை விவகாரத்தை கொண்டு என்னை தனிப்பட்ட முறையில் பழிவாங்க ஆரம்பித்துள்ளார்கள்.


என்னை பகைத்துக் கொண்டால் இருக்க விடமாட்டேன் அதனால் எனது கட்சியின் உரிமை கோரி ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.


கொழும்பில் வியாழக்கிழமை (15 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


ஐக்கிய மக்கள் சக்தி என்று குறிப்பிடப்படும் இந்த கட்சி 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.17 வருட காலம் செயற்பாட்டு அரசியலில் ஈடுப்பட்டுள்ளது.


அபே ஜாதிக பெரமுன என்பதே உண்மையான பெயர். தொலைபேசி சின்னத்தில் இந்த கட்சியின் செயற்பாட்டாளராக காலஞ்சென்ற முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டார்.


2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்ததன் பின்னர் எனது கவனம் அபே ஜாதிக பெரமுன என்ற கட்சியின் உரிமத்தை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறான பின்னணியில் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்டார். இதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவடைந்தது.


அபே ஜாதிக பெரமுன கட்சியின் பொதுச்செயலாளராக நான் பதவி வகித்தேன், எனது கணவர் கட்சியின் தலைவராக பதவி வகித்தார்.


எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் புதிய கட்சியை ஸ்தாபிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள், அந்த முயற்சிகள் தோல்வியடைந்தததுடன் எம்மை நாடி வந்தார்கள்.


சஜித் பிரேமதாஸ தரப்பினர் எங்களை நாடி அபே ஜாதிக பெரமுன கட்சியை விற்பனை செய்ய முடியுமா என கோரினார்கள். கட்சியை ஒருபோதும் விற்க முடியாது என தெரிவித்தோம்.


அவ்வாறாயின் பொது இணக்கப்பாட்டுக்கு வருவோம் என்றார்கள். இந்த கட்சியை வழங்கினால் பாராளுமன்றத்தில் இரு ஆசனங்களை எமக்கு தருவதாக குறிப்பிட்டார்கள்.


பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க முடியாது என எனது கணவர் மறுத்தார். பொதுத்தேர்தலில் போட்டியிட கட்சியை வழங்குகிறேன், ஒரு பாராளுமன்ற ஆசனத்தை எனக்கு (டயனா கமகே) வழங்குமாறு எனது கணவர் சஜித் பிரேமதாஸவின் தரப்பினரிடம் குறிப்பிட்டார்.


இவ்வாறான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமித்தேன், எனது கணவர் கட்சியின் உப தலைவராக பதவி ஏற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை தலைவராக நியமித்தார்.


ஆகவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அபே ஜாதிக பெரமுனவின் சட்ட ரீதியான உப செயலாளராக நான் உள்ளேன்.


எதிர்க்கட்சி தலைவர் இந்த உண்மையை கட்சியின் உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டாமல் அனைவருக்கும் போலியாக பதவிகளை வழங்கி தவறாக வழிநடத்தியுள்ளார்.


செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்த்திற்கு அமைய பாராளுமன்ற ஆசனத்தை வழங்குவதையும் இழுத்தடித்தார்கள். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பாராளுமன்ற ஆசனம் வழங்காமல் இருந்திருந்தால் இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி என்பதொன்று இருந்திருக்காது.


இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இருக்க வேண்டும் என்பதற்காக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினேன்.


இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்து என்னை கட்சியில் இருந்து இடைநிறுத்தினார்கள். இறுதியில் கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். இவ்விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து எனது கட்சியை மீள பெற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இவர்கள் என்னை கடுமையாக தாக்க ஆரம்பித்து விட்டார்கள்.


எனது குடியுரிமை விவகாரத்தை கொண்டு தனிப்பட்ட முறையில் பழிவாங்க ஆரம்பித்துள்ளார்கள்.




என்னை பகைத்துக் கொண்டால் இருக்க விடமாட்டேன் அதனால் தான் எனது கட்சியின் உரிமையை கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.

Post a Comment

0 Comments