Ticker

6/recent/ticker-posts

படுகொலைக்கு முன் தினேஷ் ஷாப்டர் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவுச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்


( எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டு இன்று (21) ஐந்து நாட்கள் பூர்த்தியடைந்தும், கொலையாளைகள் அல்லது சந்தேக நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

இந் நிலையில் குறித்த படுகொலை விவகார விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தில் இருப்பதாகவும் மிக விரைவில் சந்தேக நபர்களை அடையாளம் காண முடியும் எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் நம்பிக்கை வெளியிட்டார்.

இந் நிலையில், வர்த்தகர் ஷாப்டரின் பிளவர் வீதி வீட்டுக்கும் பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை பகுப்பாய்வு செய்யும் போது மற்றொரு முக்கிய விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிளவர் வீதியிலிருந்து காரை செலுத்தி வந்துள்ள தினேஷ் ஷாப்டர், மலலசேகர மாவத்தையில் உள்ள ரொட்ரிகோ லொஜன்சி பிளேவர் எனும் உணவகத்தில் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் கொள்வனவு செய்யப்பட்ட சிற்றூண்டிகள் போட்டுக் கொடுக்கப்பட்ட பை மட்டும் ஷாப்டரின் காரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, சிற்றூண்டிகள் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர், இருவரால் உட்கொள்ளப்பட்டிருக்கின்றமை தொடர்பில் ஊகிக்க முடியுமான சான்றுகள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளன.

இந் நிலையில் இதுவரையிலான விசாரணைகளில் 50 வாக்கு மூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளனர். 

அதன்படி தற்போது ஷாப்டரின் வீடு மட்டும் அலுவலகத்தின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளிடம் விசாரணையாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அவர்களை சந்தேக நபர்களாக கருதாமல், ஷாப்டர் நெருங்கிப் பழகியோர் தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்திக்கொள்ள இவ்வாறு அவர்களை விசாரணை செய்வதாக சி.ஐ.டி. அதிகாரிகள் கூறினர்.

ஷாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற போது, சாரதி எவரும் உடன் இருக்கவில்லை என்பதும், குறித்த பயணத்துக்காக ஷாப்டர் காரை அவரே செலுத்திச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில், மிக தனிப்பட்ட பயணமாக அவர் அப்பயணத்தை முன்னெடுத்திருப்பதும், அப்படி அவர் இரகசியமாக சந்திக்க சென்ற நபர் அல்லது நபர்கள் யார் என்பது தொடர்பிலும் வெளிப்படுத்தவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

விசாரணையாளர்கள் பிரதானமாக நான்கு கோணங்களில் விசரிக்கும் நிலையில், இதுவரை ஷாப்டரின் கொலையுடன் தொடர்புபட்டதாக எவரையும் கைது செய்ய போதிய சான்றுகள் கிடைக்கவில்லை என அறிய முடிகின்றது.

இந் நிலையில் சி.சி.ரி.வி. காணொளிகள், பொரளை மயான கோபுரத் தகவல்களை மிக ஆழமாக ஆராயும் சிறப்புக் குழு, அதன் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய சிலரிடம் இரண்டாவது முறையாகவும் விசாரணை நடாத்தியுள்ளது.

அத்துடன் ஷாப்டரின் கொலையின் பின்னர் அவருக்கு நெருக்கமான பலரின் செயற்பாடுகளை 24 மணி நேரமும் சி.ஐ.டி.யினர் கண்காணித்து வருவதாகவும் அறிய முடிகின்றது.

இந் நிலையில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டி.ஜி.எச். பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளிக்கு சொந்தக் காரர் ஆவார்.

பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு தாருங்கள்👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6


Post a Comment

0 Comments