Ticker

6/recent/ticker-posts

3 ஆவது உலக சம்பியன் பட்டத்தை குறிவைத்து ஆர்ஜன்டீனாவும் பிரான்ஸும் இன்று மோதல்...!




முன்னாள் சம்பியன் ஆர்ஜன்டீனாவும் நடப்பு சம்பியன் பிரான்ஸும் லுசெய்ல் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெறவுள்ள 22ஆவது பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.



இந்த இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உலகின் அதி சிறந்த இரண்டு அணிகளான ஆர்ஜன்டீனாவும் பிரான்ஸும் 3ஆவது தடவையாக உலகக் கிண்ணத்திற்கு குறிவைத்து விளையாடவுள்ள இந்த இறுதிப் போட்டி தற்போது உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக பிரகாசிக்கும் லயனல் மெஸிக்கும் கிலியான் எம்பாப்பேக்கும் இடையிலான போட்டியாக அமையும் என்று கூறலாம்.


இன்றைய இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வெற்றிபெற்றால் ஐரோப்பாவுக்கு 5ஆவது தொடர்ச்சியான உலக சம்பயன் பட்டம் கிடைக்கும். இத்தாலி (2006), ஸ்பெய்ன் (2010), ஜேர்மனி (2014), பிரான்ஸ் (2018) ஆகிய ஐரோப்பிய நாடுகள் கடந்த 4 அத்தியாயங்களில் சம்பியனாகியிருந்தன.

தென் ஆமெரிக்க நாடான பிரேஸில் கடைசியாக 2002இல் உலக சம்பியனாகியிருந்தது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு கத்தாரில் ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடொன்றும் முற்றிலும் எதிர்பாராத தலைகீழ் வெற்றிகளை ஈட்டி வரலாறு படைத்திருந்தன.



அவற்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறக்கூடிய அணிகள் என எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனி முதல் சுற்றுடனும் பிரேஸில், ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகியன நொக்-அவுட் சுற்றுடனும் எதிர்பாராத தோல்விகளுடன் வெளியேறின.

மேலும் இந்த வருட உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய 32 நாடுகளும் தோல்விகளைத் தழுவியமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றொரு விடயமாகும். இறுதிப் போட்டிக்கு தெரிவான ஆர்ஜன்டீனாவும் பிரான்ஸும் விதிவிலக்கல்ல.

சவூதி அரேபியாவிடம் ஆர்ஜன்டீனாவும் டியூனிசியாவிடம் பிரான்ஸும் முதல் சுற்றில் எதிர்பாராத தோல்விகளைத் தழுவிய போதிலும் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு பொருத்தமான அணிகள் என்பதை தத்தமது திறமையான விளையாட்டின் மூலம் நிரூபித்தன.

ஆர்ஜன்டீனா 6ஆவது தடவையாகவும் பிரான்ஸ் 4ஆவது தடவையாகவும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.

1978இலும் 1986இலும் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த ஆர்ஜன்டீனாவும் 1998இலும் 2018இலும் உலக சம்பியனான பிரான்ஸும் மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இத்தாலி (1934, 1938), பிரேஸில் (1958, 1962) ஆகிய இரண்டு நாடுகளே அடுத்தடுத்த அத்தியாயங்களில் உலக சம்பியனாகியுள்ளன. அந்த வரலாற்றுச் சாதனையை 60 வருடங்களின் பின்னர் சமப்படுத்த பிரான்ஸ் இம்முறை முயற்சிக்கவுள்ளது.



உலகக் கிண்ணத்தில் இரண்டு நாடுகளும் சந்திப்பது இது 4ஆவது தடவையாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆர்ஜன்டீனா 2 தடவைகள் வெற்றிபெற்றதுடன் கடைசியாக பிரான்ஸ் 2018இல் வெற்றி பெற்றது.

இரண்டு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய சகல வகையான 12 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆர்ஜன்டீன 6 - 3 என முன்னிலையில் இருக்கிறது. 3 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

தென் அமெரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் கடைசியாக விளையாடிய 10 உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரான்ஸ் தோல்வி அடைந்ததில்லை. 44 வருடங்களுக்கு முன்னர் 1 - 2 என ஆர்ஜன்டீனாவிடம் அடைந்த தோல்வியே கடைசியாக தென் அமெரிக்க நாடொன்றிடம் பிரான்ஸ் அடைந்த தோல்வி ஆகும்.

தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நடைபெறும் 11ஆவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற 10 இறுதிப் போட்டிகளில் 7இல் தென் அமெரிக்க நாடுகள் வெற்றிபெற்று உலக சம்பியனாகியிருந்தன.

ஆர்ஜன்டீனா 2 தடவைகள் ஜேர்மனியிடம் (1990, 2014) இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. பிரான்ஸிடம் 1998இல் பிரேஸில் தோல்விகண்டது.



2022 பீபா உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜன்டீனாவினதும் பிரான்ஸினதும் பெறுபேறுகளை ஒப்பிடும்போது பிரான்ஸ் சிறந்த நிலையில் இருப்பதை அவதானிக்கலாம். மேலும் இந்த இறுதிப் போட்டி மெஸிக்கும் எம்பாப்பேவுக்கும் இடையிலான போட்டியாக அமையும் என கருதப்படுகின்ற போதிலும் இரண்டு அணிகளிலும் இடம்பெறும் அனைவருமே அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் விளையாடக்கூடிய வீரர்களாவர். எனவே இன்றைய இறுதிப் போட்டி முழு உலகையும் பரபரப்பில் ஆழ்த்தும் என்பது உறுதி.

Post a Comment

0 Comments