Ticker

6/recent/ticker-posts

வெடிபொருட்கள் களஞ்சிய விவகாரம் : கபூர் மாமா, சாதிக்கிற்கு பிணை அளிப்பதா ? - ட்ரயல் அட் பார் நீதிமன்றின் தீர்மானம் இன்று


எம்.எப்.எம்.பஸீர்)

புத்தளம் - வனாத்துவில்லு, லக்டோஸ் தோட்டத்தில், வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் மூன்றாம் பிரதிவாதி கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, 4ஆம் பிரதிவாதி, அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் ஆகியோருக்கு பிணையளிப்பதா என இன்று (நவ.16) தீர்மானிக்கப்படவுள்ளது. 

ஏற்கனவே இவ்விவகார வழக்கில் கடந்த ஜூன் 27 ஆம் திகதி தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கியஸ்தரான நெளபர் மெளலவி உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு பிணையளிக்கப்ப்ட்டுள்ள நிலையிலேயே, மேற்படி இருவர் தொடர்பிலும் நீதிமன்றம் இன்று தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.

நேற்று (15) இவ்விவகார வழக்கானது புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரணை செய்யவென விஷேடமாக அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட் பார் சிறப்பு நீதிமன்ற அமர்வு முன்னிலையில், புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணை நடந்தது.

நீதிபதிகளான ஹசித்த பொன்னம்பெரும, நிசாந்த ஹப்பு ஆர்ச்சி மற்றும் நயோமி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்ற அமர்வு முன்னிலையிலேயே இவ்விசாரணைகள் நடந்தன.

நேற்று இந்த விவகாரத்தில் விசாரணைகலை முன்னெடுத்த குழுவில் உள்ளடெஅங்கியிருந்த சி.ஐ.டி. உப பொலிஸ் பரிசோதகர் டயஸின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. பிரதி சொலிசிட்டர் ஜெனரால் வசந்த பெரேரா, சிரேஷ்ட அரச சட்டவாதி சஜித் பண்டார ஆகியோரின் நெறிப்படுத்தலில் அவரின் சாட்சியம் பதிவுச் செய்யப்ப்ட்டது.

அதன்படி 5 சாட்சியாளர்களின் சாட்சியங்கள் இதுவரையிலேயே இவ்வழக்கில் நெறிப்படுத்தப்பட்டு, குறுக்கு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது 14 குற்றச் சாட்டுக்களின் கீழ் கடந்த 2021 ஏப்ரல் 28 ஆம் திகதி சட்ட மா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.

தற்போதும் மரணமடைந்துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்ரும் அச்சு மொஹம்மது அஹமது ஹஸ்தூன் ஆகியோருடன் இணைந்து, வனாத்துவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்கும் மற்றும் தயாரிக்கும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றதாக பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அபூ தஹ்தா எனும் மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீன் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனபப்டும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெளலவி அல்லது மொஹம்மட் இப்ராஹீம் நெளபர், அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி ஆகிய 6 பேருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாசகார அல்லது பயங்கரவாத செயர்பாடுகலை முன்னெடுக்கும் எண்ணத்துடன் வனாத்துவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்க சதி செய்தமை, யூரியா நைற்றேட், நைற்றிக் அசிட், தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை செகரித்தமை, வெடிபொருட்களை உற்பத்தி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) உ பிரிவின் கீழும், 3 (2) ஆம் பிரிவின் கீழும் பிரதிவாதிகளுக்கு எதிராக விஷேட குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெடிபொருள் சேகரிப்பு, தயாரிப்பு, ஆயுத பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, முதல் பிரதிவாதியான அபூ தஹ்தா எனப்படும் மொஹம்மட் முபீஸ் மீது, பயங்கரவாத்துக்கு நிதியளித்தலை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆயுத களஞ்சியத்துடன் கூடிய வனாத்துவில்லு லக்டோ தோட்டத்தின் ஒரு பகுதியை ஆயுத பயிற்சிகளை முன்னெடுக்க அபூ உமர் எனும் சாதிக் அப்துல்லாஹ்வுக்கு வழங்கியமை தொடர்பில் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றப் பத்திரிகையின் முதல் இரு பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள, அபூ தஹ்தா எனும் அபூ ஹனீபா மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீர் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ் ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜரானார்.

5 ஆம் பிரதிவாதியான அபூ செய்த் எனும் நெளபர் மெளலவி அல்லது மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் சார்பில் அரசினால் அவருக்கு வழங்கப்பட்ட சட்டத்தரணியும், அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் உள்ளிட்ட குழுவினரும் மன்றில் ஆஜராகினர். 4ஆம் பிரதிவாதி, அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜரானார். ஏனைய பிரதிவாதிகளுக்கும் அரசினால் நியமிக்கப்ப்ட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

நேற்று சாட்சியமலித்த சி.ஐ.டி.யின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் டயஸ், மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தின் சந்தேக நபர்கலை தேடிய நடவடிக்கையின் போது, வனாத்துவில்லு பகுதியில் வெடிபொருட்கள் சிக்கியதாக சாட்சியமளித்தமளித்தார்.

எனினும், சி.ஐ.டி.யினர் விசாரணைக்காக புத்தளம் சென்றமை, வழக்குப் பொருட்ர்களை சேகரித்த முறைமை, சந்தேக நபர்கலைப் பெயரிட்டமை தொடர்பில் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments