Ticker

6/recent/ticker-posts

மனித உரிமை என்ற போர்வையில் வன்முறைக்கும் அராஜகத்திற்கும் இடமளிக்க முடியாது - ஜனாதிபதி



எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எந்த விதத்திலும் இடமளிக்க முடியாது.

அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன், வீதியில் நின்று போராட்டம் நடத்துவதால் பாராளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 24) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் வன்முறைக்கு ஒருபோதும் இடம் கிடையாது. வீதியில் இறங்கி எவரும் நாடகமாடவும் முடியாது. அதேபோன்று அரசாங்கத்தை வீழ்த்த முற்படும் செயற்பாடுகளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கவும் முடியாது.

அரசியலமைப்பின் 9 ஆவது சரத்திற்கு இனங்க படையினர் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களுக்கான போராட்டம் என்ற போர்வையிலேயே இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அராஜகம், வன்முறை ஆகியவை மனித உரிமைக்குள் உள்ளடங்காது. அது மனித உரிமைக்கு முற்றிலும் எதிரானது. அந்த வகையில் மனித உரிமை என்ற போர்வையில் அராஜகத்திற்கும் வன்முறைக்கும் இடமளிக்க முடியாது.

அவ்வாறு வன்முறையில் ஈடுபடுபவர்களை மனித உரிமை என தெரிவித்து பாதுகாக்கவும் முடியாது. அதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பில் எமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மீறி எவரும் செயற்பட முடியாது.

அத்துடன், மனித உரிமை பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொண்டு வெளிநாடுகளில் டொலர்களைப் பெற்று நாட்டில் நெருக்கடி நிலையை உருவாக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது.

வீதியில் நின்று போராட்டம் நடத்துவதால் நான் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை. ஒரு சில குழுக்களே இவ்வாறு செயல்படுகின்றன. பெரும்பாலானோர் அமைதியாகவே உள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் எவரையும் நாம் கைது செய்து சிறையிலடைக்க வில்லை. வசந்த முதலிகே இத்தனை வருடங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கின்றார்? அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரா? என்ற கேள்வியே எழுகிறது.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முற்படும் பொலிசாரை மனித உரிமை என்ற போர்வையில் சிறையில் அடைக்கப் பார்க்கின்றனர்.

அன்றாட செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வீதிகளில் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

அவ்வாறு தடுக்கும் போது அவர்கள் மீது குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர். அது தொடர்பில் நான் கவனம் செலுத்தியுள்ளதுடன் அரசியலமைப்பின் 15 ஆவது சரத்தின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் சட்டமா அதிபரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

எனது வீட்டுக்குத் தீ வைத்தனர். எனது பிரதான பாதுகாப்பு அதிகாரியை வேலை நீக்கம் செய்ய முயற்சித்தனர்.

மனித உரிமை என்ற போர்வையில் அநாவசியமான தலையீடுகளை மேற்கொள்ள முடியாது. அரசாங்கத்திற்கு ஆளும் கட்சி மட்டுமன்றி எதிர்க்கட்சியும் அவசியம்.

அதேபோன்று நாட்டுக்காக சேவை செய்ய அனைத்து அதிகாரிகளும் வேண்டும். அத்துடன், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டைப் பாதுகாப்பதில் சிறு பதவிகளில் உள்ளவர்கள் முதல் பீல்ட் மார்சல் பதவியில் உள்ளோர் வரை அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

25,000 பேரை வீதியில் விட முடியாது படையினரின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும் பதவி உயர்வுகள் அதிகரித்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்புக்கான செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அதேபோன்று நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இன்று பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இல்லை என்பதற்காக எதிர்காலத்தைப் பற்றியும் அவ்வாறு நாம் சிந்திக்க முடியாது. நிலைமை மாறிவிடும். உலக அரசியல் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்து சமுத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் . எமது கடல் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 2040 ஆம் ஆண்டிற்குள் கடற் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எமது பொருளாதாரம் நூற்றுக்கு எட்டு வீதமாக அதிகரிக்குமானால் பாதுகாப்புக்கான செலவுகளையும் அதிகரிக்க முடியும்.


யுத்தக் கப்பல்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். அதற்கான செயற்பாடுகளில் எமது கடற்படையை ஈடுபடுத்தலாம்.

தேசிய பாதுகாப்பு செயலகம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நாம் மேலும் சிறந்த இராணுவ வீரர்களை உருவாக்குவது அவசியம். 

பொலிஸ் துறை தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் அதற்காக பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் புதிய விடயங்களை உள்ளடக்க வேண்டும். அதனை புதிதாக தயாரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

குறிப்பாக பாராளுமன்றத்தை பாதுகாக்க முன்வந்த இராணுவ படையினருக்கு நான் விசேட நன்றியை தெரிவிக்கின்றேன். அவர்கள் செயற்பட்டிருக்காவிட்டால் இன்று இந்த நாட்டில் பாராளுமன்றம் ஒன்று இருக்காது. 

அதனால் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு வீதிக்கி இறங்கி வருபவர்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரினருக்கு பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவது பாதுகாப்பு பிரிவினரின் கடமை என்றார்.

Post a Comment

0 Comments