(எம்.வை.எம்.சியாம்)

இரத்தினபுரி, ஹிதெல்லன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அடித்து மரத்தில் கட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிதெல்லன பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அதிகாலை இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்திருந்தது.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூலம் அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் பாதிக்கப்பட்ட நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இருப்பினும் படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதுடைய குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

உயிரிழந்த நபர் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பெண்ணின் கணவர் அவரை அடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணின் கணவரான 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.