Ticker

6/recent/ticker-posts

உலகக் கிண்ண போட்டிகளில் வன்லவ் கைப்பட்டி அணியும் திட்டத்தை 7 ஐரோப்பிய அணிகள் கைவிட்டன: மஞ்சள் அட்டை எச்சரிக்கை காரணம்


உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின்போது வன்லவ் எனும் கைப்பட்டி அணியும் திட்டத்தை 7 ஐரோப்பிய அணிகள் இறுதி நேரத்தில் கைவிட்டுள்ளன. சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தினால் (பீபா) கடும் தண்டனைகள் விதிக்கப்படும் அச்சுறுத்தலே இதற்குக் காரணம்.

ஓரின சேர்க்கையாளர்கள், பாலின மாற்றம் செய்தவர்கள் முதலானோரை கொண்ட, LGBTQ சமூகத்தினரின் உரிமைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக 'வன் லவ்' எனும் கைப்பட்டியை அணிவதற்கு இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் 7 ஐரோப்பிய அணிகள் திட்டமிட்டிருந்தன.

இங்கிலாந்து, வேல்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்ஸர்லாந்து. பெல்ஜியம் ஆகியனவே இந்த அணிகளாகும். 

வன்லவ் கைப்பட்டியை இவ்வருடம் நடந்த பல சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளின் ஐரோப்பிய அணிகளின் தலைவர்கள் அணிந்திருந்தனர்.

வானவில் நிறங்களைக் கொண்ட இதய உருவத்தில் 1 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட சின்னத்தை இக்கைப்பட்டி கொண்டிருந்தது.


வன் லவ் கைப்பட்டியுடன் இங்கிலாந்து அணித்தலைவர் ஹரி கேன் (வைப்பகப்படம்)

இவ்வருட உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் கத்தாரில் ஓரினசேர்க்கையாளர்கள், பாலின மாறிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அச்சமூகத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் பல நாடுகளின் அணித்தலைவர்கள் வன்லவ் கறுப்புப் பட்டியை அணிவதற்கு முன்வந்தனர்.

இதற்காக பீபா அபராததம் விதித்தால் அபராதத் தொகையை செலுத்துவதற்கு தயார் எனவும் பலஅணிகள் அறிவித்தன.

மேற்படி அணிகளில் இங்கிலாந்து இன்றைய முதல் போட்டியில் ஈரானை எதிர்கொள்ளவுள்ளது. அத்துடன் 3 ஆவது போட்டியில் அமெரிக்காவை வேல்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் வன்லவ் கறுப்புப்பட்டி விவகாரம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், இக் கைப்பட்டியை அணிபவர்களுக்கு மஞ்சள் அட்டையும் காட்டப்படும் என பீபா அறிவித்தது.

இதையடுத்து வன்லவ் கைப்பட்டி அணியும் இத்திட்டத்தை மேற்படி அணிகள் கைவிட்டுள்ளன. 

மேற்படி 7 நாடுகளின் கால்பந்தாட்டச் சங்கங்கள் கூட்டாக விடுத்த அறிக்கையொன்றில், தடைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தமது வீரர்களை விட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சாதாரணமாக, இத்தகைய ஆடை அணிகலன் விதிகளை மீறுவோருக்கு அபராதங்கள் விதிக்கப்படும். அந்த அபராதங்களை செலுத்துவதுற்கு நாம் தயாராகவிருந்தோம். இந்த கைப்பட்டியை அணிவதற்கும் நாம் வலிமையான அர்ப்பணிப்புடன் இருந்தோம். 

எனினும், தடைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தமது வீரர்களை விட முடியாது.

பீபாவின் இத்தீர்மானம் குறித்து நாம் மிக ஏமாற்றமடைந்துள்ளோம்' எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (-சேது)

Post a Comment

0 Comments