Ticker

6/recent/ticker-posts

கத்தாரின் 12 ஆண்டு காத்திருப்பை கொடுங்கனவாக மாற்றிய எக்வடோர்


சுமார் 20 லட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் கத்தாரின் 12 ஆண்டு காலக் காத்திருப்பும், பெருங்கனவும் மிக மோசமாகச் சிதைந்திருக்கிறது.

முதல் போட்டியிலேயே மோசமான தோல்வி கிடைத்திருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிருப்தியடைச் செய்திருக்கிறது என்பதை காலியான மைதான இருக்கைகளே வெளிப்படுத்தின.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்தும் நாடு தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைவது இதுவே முதல்முறை. இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு போட்டியை நடத்திய தென் ஆப்பிரிக்கா அணி, முதல் போட்டியில் வென்றாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அதுவே போட்டியை நடத்தும் நாட்டுக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியாக இருந்தது. 


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் இடம்பெற்றிருக்கும் ஏ பிரிவில் ஒப்பீட்டளவில் குறைந்த வலிமையுள்ள அணியாகக் கருதப்படும் எக்வடோருக்கு நிகராகக் கூட கத்தாரால் ஆடமுடியவில்லை என்றால் அடுத்துவரும் இரு போட்டிகளிலும் இன்னும் மோசமான தோல்விகளைச் சந்திக்கக்கூடும் என்ற விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.


கத்தார் ஃபிஃபா கால்பந்து தர வரிசையில் 50-ஆவது இடத்தில் இருக்கிறது. எக்வடோர் 44-ஆவது இடத்தில் இருக்கிறது. கத்தார் அணி கோப்பையை வெல்லும் அணி என்று யாரும் கணிக்கவில்லை. இருப்பினும் முதல்போட்டியில் பிற அணிகளைவிட வலிமை குறைந்த அணி ஒன்றுடன் ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் தோற்றிருப்பதால் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.


இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் எக்வடோர் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் என்னர் வாலென்சியா இரண்டு கோல்களையும் அடித்தார். 

போட்டி தொடங்கியபோது கத்தார், எக்வடோர் என இரு நாட்டு ரசிகர்களும் ஓரளவு சமமான அளவிலேயே மைதானத்தில் காணப்பட்டார்கள். ஆனால் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தபோது, கத்தார் ரசிகர்கள் இருந்த பகுதி பெருமளவு காலியாகவே இருந்தது.

கத்தார் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவு செய்கிறது. இதற்கு முந்தைய உலகக் கோப்பை போட்டிகளைவிட இது பலமடங்கு அதிகம். 

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில்தான் இந்தப் போட்டியை பெரும் பொருள் செலவில் கத்தார் நடத்துகிறது. மைதானங்கள், தங்குமிடங்கள், ஹோட்டல்கள், புதிய விமான நிலையங்கள், பொதுழுதுபோக்கு பூங்காக்கள் என ஏராளமான வசதிகளை கத்தார் செய்திருக்கிறது.

12 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு கத்தாருக்கு கிடைத்ததில் இருந்தே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டது அந்நாட்டு அரசு. சௌவுதி அரேபியாவுடன் தகராறு, கொரானோ பெருந்தொற்று ஆகியவை தடைகளாக வந்து போயிருக்கின்றன. ஆனாலும் பெரிய அளவு தாமதமில்லாமல் போட்டிகளைத் திட்டமிட்டபடி தொடங்கிவிட்டது கத்தார்.





பட மூலாதாரம், GETTY IMAGES

முதல் போட்டியில் தோல்வியடைந்துவிட்ட கத்தாருக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. ஆனால் ஒப்பீட்டளவில் அவை இரண்டும் எக்வடோரை விட வலிமையானவை. ஒன்று ஆப்பிரிக்க சாம்பியனான செனகல் மற்றொன்று மூன்றுமுறை இறுதியாட்டத்துக்கு தகுதிபெற்ற நெதர்லாந்து. இவ்விரு போட்டிகளும் கத்தாருக்கு கடினமாக இருக்கும் என்பதால் தென்னாப்பிரிக்காவை போல கத்தாரும் முதலாவது சுற்றிலேயே போட்டியில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


போட்டியில் என்ன நடந்தது?


போட்டி தொடங்கியது முதலே எக்வடோரின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. மூன்றாவது நிமிடத்தில் என்னர் வாலென்சியா தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் தள்ளினார். ஆனால் சில நிமிடங்களில் அது ஆப்சைட் என்று காணொளி நடுவர் அறிவித்தார்.


அந்த நேரத்தில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது. சமூக வலைத்தளங்களில் ஆப்சைட் என்று ஹேஷ்டேக் வேகமாகப் பரவியது. இது எப்படி ஆப்சைடாகும் என்ற கேள்வியுடன் கத்தாருக்கு எதிரான விமர்சனங்கள் எழுதப்பட்டன.


அடுத்த சில நிமிடங்களில் கோல் வலைக்கு அருகே வாலென்சியாவின் காலை கத்தார் கோல் கீப்பர் சாத் அல் ஷீப் தட்டிவிட்டதால், எக்வடோருக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை எந்தப் பதற்றமும் இல்லாமல் கோலாக மாற்றினார் வாலென்சியா. பந்து வலையின் ஒருபுறம் அடிக்கப்பட்டபோது, வேறொருபுறமாகப் பாய்ந்தார் கத்தார் கோல்கீப்பர். 



பட மூலாதாரம், GETTY IMAGES

எக்வடோர் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முந்தி நின்றபோது 31-ஆவது நிமிடத்தில் வாலென்சியா தலையால் முட்டி மற்றொரு கோலை அடித்தார். பிரிசியோடோ அடித்த பந்து கோல்கீப்பரை தாண்டி கோலுக்கு வெளியே சென்றபோது, பாய்ந்து வந்து தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார் வாலன்சியா.


இடைவேளைக்குப் பிறகு இரு அணிகளுக்கும் கோலடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் எதுவும் கோலாகவில்லை. முதல் பாதியில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான கத்தார் கோல்கீப்பர் இரண்டாவது பாதியில் சிறப்பாகச் செயல்பட்டார். கோலை நோக்கி வேகமாக அடிக்கப்பட்ட துல்லியமாகப் பாய்ந்து தடுத்தார். ஆனால் கத்தார் அணி எக்வடோரை வெற்றிகொள்ள அத்தகைய முயற்சிகள் மாத்திரம் போதுமானதாக இருக்கவில்லை.

Post a Comment

0 Comments