மாத்தறை – திஹகொட பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

15 வயதான பாடசாலை மாணவர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்றை நிறுத்தி, சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியுள்ளது.


இந்த துப்பாக்கி செயற்பட்டமையினால், பாடசாலை மாணவனின் தலை பகுதிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த பாடசாலை மாணவன், கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதையடுத்து, திஹகொட பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்த பிரதேசவாசிகள், அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, அருகாமையிலுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.