சமைக்காமல் இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவனை இந்தியாவின் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
மனைவியை கொலை செய்த கணவரை நீதிமன்றமே விடுதலை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுவதுடன், சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள முடிகிரே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷா (43). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர், ராதா (33) என்ற பெண்ணை சுரேஷா கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முதலில், ஓராண்டு இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக போயிருக்கிறது. பின்னர் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து சுரேஷா கொஞ்சம் முன்னதாக வீடு திரும்பியுள்ளார். எப்போதும் வரக்கூடிய நேரத்துக்கு முன்கூட்டியே சுரேஷா வந்ததால், வீட்டில் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. அப்போது அவரது மனைவி ராதாவிடம் ஏதாவது சமைத்து தருமாறு கூறியிருக்கிறார். ஆனால் அப்போது ராதா மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும், தன்னால் சமைக்க முடியாது என்றும், ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுமாறும் ராதா கூறியுள்ளார்.
ராதாவின் இந்த பதிலால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுரேஷா, வீட்டில் இருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து ராதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், சுரேஷாவை கைது செய்தனர். இந்த வழக்கை 2017-ம் ஆண்டு விசாரித்த மாவட்ட நீதிமன்றம், சுரேஷாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சூழலில், தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் சுரேஷா அண்மையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கானது, நீதிபதிகள் சோமசேகர், சிவசங்கர கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், “பொலிஸ் மற்றும் அரசுத் தரப்பு விசாரணையில், சுரேஷாவின் மனைவி வீட்டில் சமைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுதான் குற்றவாளியை கோபமடையச் செய்து அவரது மனைவியை கொலை செய்ய தூண்டியுள்ளது.
மனைவியை தண்டித்து அவரை காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சுரேஷா அவரை அடித்திருக்கிறார். ஆனால் மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில் அவர் இந்த காரியத்தை செய்யவில்லை. எனவே இந்தக் குற்றமானது ஐபிசி 300-வது பிரிவின் கீழ் (நோக்கமற்ற கொலை) தான் வரும். கொலை வழக்கான 302-இன் கீழ் வராது. எனவே அவர் செய்த குற்றத்துக்கு 6 வருடம் 22 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததே போதுமானது. அவரை உடனடியாக விடுதலை செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments