கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரியை சேர்ந்த 60 வயதான சுலைமான். மனைவி செரீனா ஆகியோரின் மகனான 28 வயதான சகத். இவர் மனநலம் குன்றியவர்.

நேற்று காலை 10 மணிக்கு செரீனா வெளியே சென்ற போது வீட்டின் முன்னறையில் சகத் இருந்த நிலையில் பெட்ரோலுடன் அங்குச் சென்ற சுலைமான் திடீரென சகத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டுத் தப்பி ஓடி விட்டார்.

இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி சகத் அலறி துடித்தார். இந்த சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தப்பிச் சென்ற சுலைமானை திருச்சூர் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், தினம், தினம் மகன் படும் துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாததால் உயிரோடு எரித்துக் கொன்று விட்டதாக சுலைமான் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட மகனை, பெற்ற தந்தையே எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது