யானையின் தாக்குதலில் மனைவி பலியாகி மூன்றரை மாதங்களில் கணவரும் யானையின் தாக்குதலுக்குள்ளாகி பலி.
கரடியனாறு பொலிஸ் பிரிவு ஈரளக்குளம், குடாவெட்டையில் சம்பவம்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் பிள்ளையான் (65) என்பவரே இன்று (16/10) அதிகாலை யானையின் தாக்குதலில் மரணித்தவராவார்.

குடாவெட்டையில் தனியாக தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, நள்ளிரவு வேளையில் தனது வீட்டு வளவுக்குள் நின்ற தென்னை மற்றும் பயன்தரும் மரங்களை யானைகள் உட்கொள்வதை அவதானித்ததால் அதனை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட போதுதான் கோபமடைந்த யானையினால் துரத்தப்பட்டு வயல் வெளியில் வைத்து தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

சென்ற 30-06-2022 அன்று கோயிலுக்கு சென்று வீடு நோக்கி வந்த இவரது மனைவியை வீட்டிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் வைத்து யானை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே மரணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரியின் தகவலுக்கமைவாக சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் மரண விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்து ,பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தார்.

(ஏறாவூர் நஸீர்)