உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 07 இலங்கை மாணவர்களின் நிழற்படங்களை உக்ரைன் ஊடகவியலாளர் ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய மற்றும் உக்ரைன் ஊடகங்களுக்கு இடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

20 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்த ஏழு மாணவர்களில் 6 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு உக்ரைனுக்கு வந்தவர்கள் என்றும் உக்ரைன் ஊடகவியலாளர் மரியா ரோமானென்கோ தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைனின் குப்யன்ஸ்க் பிரதேசத்துக்குச் சென்ற 3 வாரங்களில், குப்பியன்ஸிலிருந்து கார்கிவ் நோக்கி செல்ல முயன்ற போது இவர்கள் ரஷ்ய படைகளிடம் சிக்கி, அவர்களிடம் சம்பளம் வழங்காமல் ரஷ்ய படைகள் வேலை வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்தை ரஷ்யாவின் இராணுவ சிவிலிய ஆட்சிக்கு எதிராகத் தூண்டும் முயற்சி என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இராணுவ சிவிலியன் ஆட்சியின் தலைவர் விட்டலி கஞ்சேவ்வை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகமான டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மாணவர்களை உக்ரைனிய சிறப்புப் படைகள் தடுத்து வைத்ததாகவும் போரில் வெற்றி பெற உக்ரைன் மக்களின் உயிரைப் பணயம் வைத்து வருவதாகவும் விட்டலி குற்றம் சுமத்தியுள்ளார்.

7 இலங்கை மாணவர்களையும் ரஷ்யப் படைகள் தடுத்து வைத்துள்ளதாக உக்iரனிய ஊடகங்கள் குற்றம் சுமத்துகின்ற போதும், உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் மீது ரஷ்ய ஊடகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய படையினரால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கையர்களும் மருத்துவ மாணவர்கள் அல்ல என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவிற்கு பயணிக்க முயற்சித்த குழுவினர் என அமைச்சர் கூறுகிறார்.

இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் உக்ரைனில் இருந்து இந்த நாட்டுக்கு வருவதற்கு தயாராக இருந்த இலங்கையர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.