Ticker

6/recent/ticker-posts

தனது காதலிக்கு காதல் கடிதம் கொடுத்ததாக குற்றம்சாட்டி அமைச்சரின் மகன் தலைமையில் மாணவன் ஒருவனை கொடூரமாக தாக்கிய கும்பல்.... 50 மீற்றர் தூரத்தில் இருந்த பொலிஸ் நிலையம்.


 அமைச்சரின் மகன் என கூறிக்கொண்டு டிபெண்டர் வாகனத்தில் வந்த இளைஞன் உள்ளிட்ட குழுவினர், கிரிபத்கொடவில் உள்ள பிரபல மேலதிக வகுப்புக்கு முன்பாக மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.


சுமார் 20 பேர் கொண்ட கும்பல் மாணவனை இரத்தம் வரும் வரை தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களைத் தவிர, கருப்பு உடை அணிந்த மெய்ப்பாதுகாவலர்கள் குழு டிபெண்டர் வாகனங்களில் வந்து அருகில் இருந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

அமைச்சரின் மகன் என கூறிய இளைஞன், அந்த பயிற்சி வகுப்பில் உள்ள தனது காதலிக்கு, மேற்படி இளைஞன் காதல் கடிதம் கொடுத்தாக தெரிவித்துள்ளார்.

நேற்று (26) இரவு 7.30 மணியளவில், கடுமையாகத் தாக்கப்படும் இளைஞன் தொடர்பில் பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், கிரிபத்கொட பொலிஸாருக்கும் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இந்த மேலதிக வகுப்பு அமைந்துள்ளது


வாகனங்களில் பயணித்தவர்கள் கூட வாகனங்களை நிறுத்திவிட்டு தாக்குதலை வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால் யாரும் தடுக்க முயலவில்லை. அதைத் தடுக்கச் சென்ற இருவரை மெய்ப்பாதுகாவலர்கள் தாக்கியதே அதற்குக் காரணமெனவும் கூறப்படுகிறது.

அங்கிருந்த ஒருவர் தாக்குதலை தடுக்க முயன்றபோது, ​​அமைச்சரின் மகன் கும்பலிடம் இருந்து தப்பிய அந்த மாணவன் வகுப்பரைக்குள் நுழைந்துள்ளார். பின்னர், அந்த கும்பல் வகுப்பிற்குள் புகுந்து மாணவனை மீண்டும் தாக்கியுள்ளனர்.

கடைசி நேரத்தில் கைத்துப்பாக்கிகளுடன் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் அங்கு வந்தபோது, ​​தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன பேட்டியளித்துள்ளார்.

களனியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் மகன் இங்கு இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மேலதிக வகுப்புக்கு அருகில் தொடர்ந்து மோதல்கள் ஏற்படுவதால் இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை கருத்திற்கொண்டு இவ்வாறான மனிதாபிமானமற்ற மோதல்களை தடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்க நேற்று (27) பிரதேசவாசிகள் கலந்துரையாடியுள்ளனர்

Post a Comment

0 Comments