கேகாலை ரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய வேன் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை பதில் நீதவான் ​மெல்கம் மசாடோ உத்தரவிட்டுள்ளார். 


20 வயதுடைய இளைஞன் ஓட்டிச் சென்ற வேன் ஒன்று வீதியின் மறுபுறம் வந்த மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் கேகாலை ரங்வல பகுதியில் நேற்று (09) இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்று வீதியின் எதிர் திசையில் வந்த மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. 


விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்களின் ஓட்டுனர்கள் மூவரும் பின்னால் பயணித்த இருவருமே படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 


இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இருவரும் மற்றும் பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


துல்ஹிரிய மற்றும் வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் மிஃப்லால், மொஹமுஸ் ரஹூம் மற்றும் மொஹமட் மனாசிக் ஆகிய மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். 


விபத்தில் காயமடைந்த மற்றைய இருவரும் படுகாயமடைந்து கேகாலை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


வேன் சாரதி கவனயீனமாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். 


சந்தேக நபர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.