கூழ் கொதித்துக் கொண்டிருக்கும் அண்டாவில் தவறி விழுந்து பலியானவரின் வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பழங்காநத்தம், மேலத்தெரு முத்து மாரியம்மன் கோயிலில் கடந்த 29-ம் தேதி ஆடி வெள்ளிக்கிழமையன்று பக்தர்களுக்கு வழங்க ஆறுக்கும் மேற்பட்ட பெரிய அண்டாக்களில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தனர்.




கோயிலுக்கு அருகே குடியிருக்கும் முத்துக்குமார் என்ற முருகன், கூழ் காய்ச்சுவதற்கு உதவி செய்துகொண்டிருந்தார். கூழ் கொதிக்கும் அண்டாக்கள் அருகே வந்த முருகன், திடீரென நிலைதடுமாறி கூழ் கொதித்துக் கொண்டிருந்த அண்டாவில் விழுந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது... பின்னர் நீண்ட முயற்சிக்குப் பிறகு அண்டாவைக் கீழே சாய்த்து முருகன் மீட்கப்பட்டார். அண்டா கவிழ்ந்ததில் முருகனைக் காப்பாற்ற முயன்ற சிலர்மீதும் கொதிக்கும் கூழ் பட்டது.

அதையடுத்து, முருகன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அவர் இறந்துவிட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், முருகன் கூழ் அண்டாவில் நிலைதடுமாறி விழும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

என்ன நடந்தது என்று பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். ``54 வயதான முத்துக்குமார் என்ற முருகன் இந்தப் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். சம்பவ தினத்தன்று கூழ் காய்ச்சும் இடத்தில் வந்த முருகன் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. அதையடுத்து கையில் எதையாவது பிடிப்பதற்காகக் கூழ் அண்டாவைப் பிடித்தவர்... அப்படியே நிலை தடுமாறி அதில் விழுந்து விட்டார்.

இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்க முயற்சி செய்தார்கள். கொதித்துக்கொண்டிருந்த கூழின் வெப்பத்தால் தொட்டுத் தூக்கக்கூட முடியவில்லை.

அதன் பின்பு அண்டாவைக் கவிழ்த்து அவரை மீட்டாலும் கொட்டிக்கிடந்த கூழில் வழுக்கி விழுந்து அவருக்குக் காயம் ஏற்பட்டது. ஒரு வழியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்தோம். ஆனால், சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்துவிட்டார். சமீபத்தில்தான் வேலைக்குச் சென்ற இடத்தில் அவர் மனைவிக்குக் கையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கோயில் நிகழ்ச்சியில் வேலை செய்ய வந்தவர் இப்படிப் பலியாகிவிட்டார்" என்றார்கள் வேதனையுடன்!

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன்அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6